பழனி அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு


பழனி அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு
x
தினத்தந்தி 14 Jan 2017 4:00 AM IST (Updated: 13 Jan 2017 11:11 PM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தது.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்ததால் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள மாடுபிடி வீரர்கள், இளைஞர்கள் முடிவு செய்தனர். அதன்படி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக அவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆண்டிப்பட்டியிலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று அப்பகுதியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் பழனியை அடுத்த கொமரலிங்கம், நெய்க்காரபட்டி, உடுமலை, காவலப்பட்டி, கரடிகூட்டம் மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தங்களுடைய காளைகளுடன் வந்து ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டனர்.

போலீஸ் விசாரணை

மேலும் கொங்கு இளைஞர் போரவையை சேர்ந்தவர்களும் 10–க்கும் மேற்பட்ட காளைகளுடன் ஆண்டிப்பட்டி ஜே.ஜே. நகர் பகுதியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினர். ஜல்லிக்கட்டில் சீறி வந்த காளைகளை ஏராளமான மாடு பிடி வீரர்கள் அடக்கினர். இதற்கிடையே ஆண்டிப்பட்டி பகுதியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது குறித்து பழனி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு சண்முக சுந்தரம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அதற்கு முன்னதாகவே ஜல்லிக்கட்டு நடத்தி முடிக்கப்பட்டது. இதனால் போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினர். மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மீண்டும் அப்பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என போலீசார் கருதியதால் அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story