ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி கோவையில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி கோவையில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2017 3:30 AM IST (Updated: 14 Jan 2017 12:05 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரியும் இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோவையில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தி.மு.க. ஆர்ப்பாட்டம்

பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. இதற்கு தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இளைஞர்கள், அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினரும் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்றுத் தராத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 13–ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி கோவை மாவட்ட திமு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்றுக்காலை நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கோவை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் ஆ.நாச்சிமுத்து, முத்துசாமி, சி.ஆர்.ராமச்சந்திரன், இரா. தமிழ்மணி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன் கலந்து கொண்டு பேசியதாவது:–

கை காட்டுவது ஏன்?

தமிழக மக்களின் உணர்வோடு இணைந்த ஜல்லிக்கட்டு பற்றி கவலைப்படாத அரசாக மாநில அரசு உள்ளது. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும் அதை அமைக்க முடியாது என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால் ஜல்லிக்கட்டு பிரச்சினையில் மட்டும் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டை கை காட்டுவது ஏன்? என்று தெரியவில்லை. ஜல்லிக்கட்டுக்கு விதித்துள்ள தடையை உடனடியாக மத்திய அரசு நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி பேசும்போது, ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி தமிழகம் முழுவதும் கோரிக்கைகள் வலுத்து வருகிறது. எனவே ஜல்லிக்கட்டுக்கு விதித்துள்ள தடையை நீக்காவிட்டால் கோவை மாவட்டம் முழுவதும் தடையை மீறி ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்படும் என்றார்.

ஏர் கலப்பை–மாட்டு வண்டி

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த தி.மு.க. பிரமுகர் டி.ஆர்.சண்முகசுந்தரம் தலைமையில் தொண்டர்கள் ஏர் கலப்பை கொண்டு வந்திருந்தனர். மேலும் மாடுபிடி வீரரின் படம் பொறித்த சிறிய பேனரையும் அவர்கள் கொண்டு வந்திருந்தனர். ஆர்ப்பாட்டம் தொடங்குவதற்கு முன்பு கோவை மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பையா கவுண்டர் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் மாட்டு வண்டிகளில் வந்திருந்தனர். ஆர்ப்பாட்டம் முடியும் வரை மாட்டு வண்டிகள் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

ஆர்ப்பாட்டத்தில், நா.கார்த்திக் எம்.எல்.ஏ., இளைஞர் அணி மாநில துணை செயலாளர் பைந்தமிழ் பாரி, குறிச்சி பிரபாகரன், நா.முருகவேல், திராவிட மணி, ஆறுமுக பாண்டி, கோட்டை அப்பாஸ், வக்கீல் அருள்மொழி, நா.கார்த்திக் செல்வராஜ், குறிச்சி லோகு உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தி.மு.க. கொடிகளை ஏந்தி வந்திருந்தனர். அவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்றுத்தராத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.


Next Story