கோவை அருகே தடையை மீறி 3 கிலோ மீட்டர் தூரம் நடந்த ரேக்ளா பந்தயம்
கோவை அருகே தடையை மீறி 3 கிலோ மீட்டர் தூரம் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அது மட்டும் இல்லாமல் தடையை மீறி ஆங்காங்கே ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தயங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று முன்தினம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். இது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது.
இதை தொடர்ந்து கோவையை அடுத்த எட்டிமடையில் ரேக்ளா பந்தயம் நடைபெறும் என்று அந்த பகுதி மக்கள் அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்றுக்காலை 10 மணி முதல் எட்டிமடை பிரிவு மைதானத்தில் அந்த பகுதியினர் திரண்டனர். நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்தது. காலை 11 மணி யளவில் 50 ரேக்ளா வண்டிகள் அங்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டு பந்தயம் தொடங்கியது.
சீறி பாய்ந்த காளைகள்எட்டிமடை பிரிவு மைதானத்தில் இருந்து ரேக்ளா வண்டிகள் புறப்பட்டு க.க.சாவடி, வேலந்தாவளம், பைபாஸ் சாலை வழியாக சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் எட்டிமடை பிரிவு மைதானத்தை அடைந்தன. ரேக்ளா வண்டிகளை இழுத்தபடி சாலையில் காளைகள் இலக்கை நோக்கி சீறி பாய்ந்தன. அவை ஒன்றையொன்று முந்தி சென்றதை பார்த்து சாலையோரம் நின்ற பொதுமக்கள் கைதட்டி ரசித்தனர்.
முடிவில் வெற்றி பெற்ற ரேக்ளா பந்தய வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த பந்தயத் துக்கு போலீசார் அனுமதி அளிக்க வில்லை. ஆனால் தடையை மீறி ரேக்ளா பந்தயம் நடைபெற்ற போது அங்கு போலீசார் இல்லை.
காளைகளுக்கு உற்சாகம்இது குறித்து ரேக்ளா பந்தயத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் சிலர் கூறியதாவது:–
கோவை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையின் போது ரேக்ளா பந்தயம் நடத்தப்படுவது வழக்கம், ஆனால் கடந்த ஆண்டு முதல் சுப்ரீம் கோர்ட்டு தடை காரணமாக ரேக்ளா பந்தயங்களை நடத்த முடிய வில்லை. ஆனால் தற்போது தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயத்துக்கு பொது மக்கள் பலத்த வரவேற்பு தெரிவித்து வருவதால் அதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற பந்தயங்களை நடத்தினோம்.
இதில் வந்த காளைகள் அனைத்தையும் நாங்களே வளர்த்து வருகிறோம். பொங்கல் பண்டிகையின் போது ரேக்ளா பந்தயம் நடத்துவது மனிதர்களுக்கு மட்டும் உற்சாகம் கொடுப்பது இல்லை. அதில் பங்கு பெறும் காளைகளும் உற்சாகம் அடைகின்றன. பந்தயத்தில் கலந்து கொண்ட காளைகளுக்கு கரும்பு, வெல்லம், பழங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்வோம். கிராம பகுதிகளில் வயல்களை சுற்றி பார்ப்பதற்கு ரேக்ளா வண்டிகளை பயன்படுத்துவதை இன்றும் நாம் பார்க்கலாம். எனவே மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து ரேக்ளா பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.