அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி நூதன ஆர்ப்பாட்டம்


அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2017 4:00 AM IST (Updated: 14 Jan 2017 12:33 AM IST)
t-max-icont-min-icon

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் கால்நடைகளுடன் வந்து அரை நிர்வாணம், திருவோடு மற்றும் விஷ பாட்டிலுடன், கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். மக்கள் சேவை இயக்க அகில இந்திய தலைவர் தங்க சண்முகசுந்தரம், பேரியக்கத்துக்கு எதிரான பேரியக்க மாநில தலைவர் லெனின், மக்கள் சேவை இயக்க செயலாளர் சரவணன் ஆகியோர் பேசினர். மக்கள் சேவை இயக்க மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் பஞ்சநாத கணபதி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாவட்ட தலைவர் தங்கராசு, மாவட்ட பொருளாளர் நல்லதம்பி, மாநில நிர்வாகி உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிவாரணம் வழங்க கோரிக்கை

ஆர்ப்பாட்டத்தின்போது, வரலாறு காணாத வறட்சியால் அனைத்து விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு அவர்களுக்கான நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும். நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், கரும்புக்கு ரூ.50 ஆயிரமும், வாழைக்கு ரூ.1 லட்சமும், அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு அடுத்த விவசாய பணிகள் கிடைக்கும் வரை ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

Next Story