பொங்கல் பண்டிகையையொட்டி சேலத்தில் பூக்கள் விலை உயர்வு
பொங்கல் பண்டிகையையொட்டி சேலத்தில் நேற்று பூக்கள் விலை உயர்ந்து
சேலம்,
தமிழர்களின் முக்கிய திருநாளாக கருதப்படும் பொங்கல் பண்டிகை இன்று(சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் மாநகரில் நேற்று பொங்கல் பொருட்களை வாங்குவதற்காக கடைவீதியில் வழக்கத்தை விட அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. இதனால், வாழைப்பழம், தேங்காய் மற்றும் பூஜை பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் கிலோ ரூ.800 வரை விற்கப்பட்ட குண்டுமல்லி நேற்று ரூ.200 வரை உயர்ந்து ரூ.1,000–க்கு விற்கப்பட்டது. சன்னமல்லி கிலோ ரூ.1,000–க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.650–க்கும், காக்கட்டான் கிலோ ரூ.400–க்கும், அரளி கிலோ ரூ.160–க்கும், சாமந்தி மற்றும் சம்பங்கி கிலோ ரூ.100–க்கும், கோழிக்கொண்டை ரூ.250–க்கும், கலர் பூ கிலோ ரூ.200–க்கும், ரோஸ் கிலோ ரூ.300–க்கும், பட்டன் ரோஸ் ஒரு கட்டு ரூ.80–க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வரத்து குறைவுஇதுகுறித்து பூ வியாபாரிகள் கூறும் போது, ‘கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பனி காரணமாக மார்க்கெட்டிற்கு பூக்களின் வரத்து குறைவாக வருகிறது. இதனால் சன்னமல்லி, குண்டுமல்லி ஆகிய பூக்களின் விலை கிலோ ரூ.1,000 வரை விற்பனை செய்யப்பட்டது. பொங்கல் பண்டிகையையொட்டி பூக்கள் விலை இன்று(நேற்று) உயர்ந்து விற்கப்பட்டது’ என்றனர்.
பூக்கள் விலை உயர்ந்தாலும், வியாபாரிகள், பொதுமக்கள் ஏராளமானவர்கள் மார்க்கெட்டிற்கு வந்து பூக்களை மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்கி சென்றனர். அதேபோல் பூஜைக்கு பயன்படுத்தப்படும் சாமி பூக்களையும் கடைவீதியில் பொதுமக்கள் அதிகளவில் வாங்கி சென்றதை காணமுடிந்தது.