எருதாட்டத்திற்கு அனுமதி கேட்டு வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம்


எருதாட்டத்திற்கு அனுமதி கேட்டு வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2017 5:00 AM IST (Updated: 14 Jan 2017 12:41 AM IST)
t-max-icont-min-icon

எருதாட்டத்திற்கு அனுமதி கேட்டு வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி சேலம் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

சேலம்,

எருதாட்டத்திற்கு தடை

தமிழகத்தில் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு 3–வது ஆண்டாக தடை நீடித்து வருகிறது. அதுபோல பொங்கல் விழாவின்போது எருதாட்டம் நடத்துவது வழக்கம். தற்போது எருதாட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தமிழகத்தில் சில இடங்களில் தடையை மீறி எருதாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் ரெட்டியூர், நரசோதிப்பட்டி, குரங்குச்சாவடி போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் பொங்கல் விழாவையொட்டி எருதாட்டம் நடத்துவது வழக்கம். ஆனால், அதற்கு இந்த ஆண்டும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீடுகளில் கருப்புக்கொடி

நரசோதிப்பட்டி பெருமாள்மலை அடிவாரம் பகுதியில் வாழும் மக்கள், தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றினர். அப்பகுதியில் உள்ள 75–க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அப்பகுதி வாலிபர்கள் திரண்டு சென்று கருப்புக்கொடிகளை கட்டினர். மேலும் கருப்புக்கொடியை ஏந்தியவாறு சென்று போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

எருதாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுவதால், பொங்கல் விழா முடியும் வரை கருப்புக்கொடியை அவிழ்க்கமாட்டோம் என்றும் தெரிவித்தனர். போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது:–

அடுத்தக்கட்ட நடவடிக்கை

தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, எருதாட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது கண்டிக்கத்தக்கது. எருதாட்டம் என்பதும் கோவில் விழா மற்றும் முக்கிய பண்டிகையின்போது அந்தந்த பகுதியில் உள்ள மக்களால் எளிமையாக நடத்தப்படுவது வழக்கம். எனவே, எருதாட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும். இல்லையேல் ஊர்மக்கள் கூடிபேசி அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்குவோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story