பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரமத்தி வேலூர் ஏல சந்தையில் பூக்கள், வாழைத்தார்கள விலை உயர்வு


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரமத்தி வேலூர் ஏல சந்தையில் பூக்கள், வாழைத்தார்கள விலை உயர்வு
x
தினத்தந்தி 13 Jan 2017 10:45 PM GMT (Updated: 13 Jan 2017 7:14 PM GMT)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரமத்தி வேலூர் ஏல சந்தையில் பூக்கள் மற்றும் வாழைத்தார்கள் விலையில் உயர்வு ஏற்பட்டது.

பரமத்தி வேலூர்,

பூக்கள் விலை உயர்வு

பரமத்தி வேலூர் வட்டத்தில் அண்ணாநகர், கபிலர்மலை, பரமத்தி, எல்லைமேடு, கரசப்பாளையம், செங்கப்பள்ளி, பெரிய சோழிபாளையம், குஞ்சாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள ஏலச்சந்தைக்கு கொண்டு வந்து ஏலம் விடுகின்றனர். நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.ஆயிரத்திற்கும், முல்லைப்பூ (ஊசி மல்லி) கிலோ ரூ.200–க்கும், செவ்வந்தி கிலோ ரூ.30–க்கும், சம்பங்கி கிலோ ரூ.50–க்கும், அரளி கிலோ ரூ.50–க்கும், ஜாதி மல்லி ரூ.300–க்கும், ரோஜா பூ கிலோ ரூ.110–க்கும் ஏலம் போனது.

நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.ஆயிரத்து 400–க்கும், முல்லைப்பூ (ஊசி மல்லி) கிலோ ரூ.800– க்கும், செவ்வந்தி கிலோ ரூ.120–க்கும், சம்பங்கி கிலோ ரூ.110–க்கும், அரளி கிலோ ரூ.150–க்கும், ஜாதி மல்லி ரூ.700–க்கும், ரோஜா பூ கிலோ ரூ.150–க்கும் ஏலம் போனது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

வாழைத்தார்கள் விலை உயர்வு

பரமத்தி வேலூர் காவிரி கரையோர பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் பரமத்தி வேலூர் ஏலச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ரூ.300–க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.250–க்கும், பச்சைநாடன் வாழைத்தார் ரூ.200–க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.150–க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.4–க்கும் ஏலம் போனது.

நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ரூ.600–க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.300–க்கும், பச்சைநாடன் வாழைத்தார் ரூ.250–க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.250–க்கும் ஏலம் போனது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5–க்கு விற்பனையானது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


Next Story