சுங்க இலாகா அதிகாரிகள் மீது குறை கூறி திருச்சி விமான நிலையத்தில் குடும்பத்துடன் மறியல் செய்த பயணி


சுங்க இலாகா அதிகாரிகள் மீது குறை கூறி திருச்சி விமான நிலையத்தில் குடும்பத்துடன் மறியல் செய்த பயணி
x
தினத்தந்தி 14 Jan 2017 3:15 AM IST (Updated: 14 Jan 2017 1:09 AM IST)
t-max-icont-min-icon

சுங்க இலாகா அதிகாரிகள் மீது குறை கூறி திருச்சி விமான நிலையத்தில் குடும்பத்துடன் மறியல் செய்த பயணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் கீழ வாசல் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் அய்யாறு. இவர் மஸ்கட்டில் இருந்து நேற்று காலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவரை வரவேற்று அழைத்து செல்வதற்காக அவரது மனைவி குழந்தை மற்றும் மைத்துனர் உள்ளிட்ட உறவினர்களும் வந்து இருந்தனர்.


விமான நிலையத்தில் தவித்த பயணி

பரமசிவம் அய்யாறு கொண்டு வந்த டி.வி. மற்றும் தங்க நகைக்கு சுங்க இலாகா அதிகாரிகள் ரூ.5 ஆயிரத்து 250 வரி விதித்தனர். ஆனால் அதற்கான பணம் அவரிடம் இல்லை. ரூ.2 ஆயிரம் மட்டுமே வைத்து இருந்தார். இதனால் அவரால் வரியை கட்ட முடியவில்லை. வரி கட்ட முடியாமல் காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை விமான நிலையத்தின் உள்ளேயே தவித்தார். அவரது மனைவி மற்றும் உறவினர்கள் வெளியே பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களிடம் சுங்க இலாகா அதிகாரிகள் அளவுக்கு அதிகமாக வரி விதித்து விட்டதாக குறை கூறினார்கள்.

மறியலால் பரபரப்பு

இந்நிலையில் திடீர் என பரமசிவம் அய்யாறு அவரது மனைவி, குழந்தை, மைத்துனர் ஆகியோர் விமான நிலையத்தின் பயணிகள் வருகைக்கான பகுதியில் தரையில் அமர்ந்து சுங்க இலாகா அதிகாரிகளை கண்டித்து கோ‌ஷம் போட்டு மறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தலையிட்டு அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

ஜி.கே. வாசன் செய்த உதவி

சுங்க இலாகா அதிகாரிகளை கண்டித்து பரமசிவம் அய்யாறு குடும்பத்துடன் மறியல் செய்து கொண்டிருந்த போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் சென்னையில் இருந்து வந்த விமானத்தில் இருந்து இறங்கி வெளியே வந்தார். அவர் வெளியே வந்த போது பரமசிவம் அய்யாறுவின் மைத்துனர் ஓடி வந்து சுங்க இலாகா அதிகாரிகள் பற்றி முறையிட்டார். மேலும் அவர்கள் விதித்த வரியை கட்டுவதற்கு தங்களிடம் பணம் இல்லை என்றும் கூறினார். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் பற்றி விசாரித்த ஜி.கே. வாசன், பயணி பரமசிவம் அய்யாறுவுக்கு ரூ.3,750 பணம் கொடுத்து சுங்க வரியை கட்டுவதற்கு ஏற்பாடு செய்தார். உடனடியாக அந்த பணம் சுங்க இலாகா அதிகாரிகளிடம் கட்டப்பட்டதால் பரமசிவம் அய்யாறு, வாசனுக்கு நன்றி கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.


Next Story