தள்ளாடுகிறேன் என்கிறார்கள் ‘‘நான் 100 வயது வரை வாழ்வேன்’’ தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பேச்சு
நான் தள்ளாடுகிறேன் என்கிறார்கள் ஆனால் நான் 100 வயது வரை வாழ்வேன் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காயார் கிராமத்தில் நேற்று மாலை தே.மு.தி.க சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. இதில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
பிரேமலதா விஜயகாந்த் கிராமப் பெண்களுடன் இணைந்து பொங்கலிட்டார். பின்பு ஏழை–எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது.
விழாவில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:–
விவசாயிகளை எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் நானும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன் தான். இந்த வீர விழாவில் நடைபெறும் ரேக்ளாரேஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தான் என் படங்களில் கூட அக்காட்சியை வைத்திருப்பேன்.
தள்ளாடுகிறேன் என்கிறார்கள்...என்னால் அதிகம் பேச முடியாது. ஏனென்றால் நான் கீழே குனிந்தேன் என்றால் எனக்கு கண்ணில் தண்ணீர் வந்துவிடும். அதனால்தான் பேசுவதில்லை.
ஜெயலலிதாவின் மறைவுக்கு வந்த போதும் கூட கீழே இறங்கும் போது பார்த்து பார்த்து இறங்கி வந்தேன். இதை பார்த்த மீடியாக்கள் நான் தள்ளாடுகிறேன் என்று எழுதி விட்டன.
அதைபற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை. ஏனென்றால் நான் 100 வயது வரை உயிர் வாழ்வேன். எனக்கு எந்த வியாதியும் கிடையாது. என் மனைவி இருக்கும் வரையில் என்னை எந்த வியாதியும் நெருங்காது.
விவசாயிக்கு சோறு இல்லை...இயற்கையாக கிடைத்த நீரை தேக்கி வைக்காமல் இப்போது அண்டை மாநிலங்களிடம் நீருக்காக கையேந்தி நிற்கிறது இந்த அரசு. ஆண்ட கட்சியும் இப்படி தான். ஆளும் கட்சியும் இப்படித்தான்.
சோறு கொடுத்த விவசாயிக்கே சோறு இல்லை. இதுதான் இந்த ஆட்சியின் நிலை. ஜல்லிக்கட்டினை நடத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும். நான் நல்லதை தான் சொல்வேன். ஆனால் எந்த மீடியாவும் எனக்கு ஆதரவு தருவதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.