போகி பண்டிகை புகை மூட்டத்தால் சென்னையில் தரை இறங்க முடியாமல் 6 விமானங்கள் திருப்பி விடப்பட்டன


போகி பண்டிகை புகை மூட்டத்தால் சென்னையில் தரை இறங்க முடியாமல் 6 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
x
தினத்தந்தி 14 Jan 2017 3:15 AM IST (Updated: 14 Jan 2017 2:12 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் போகி பண்டிகை புகை மூட்டத்தால் தரை இறங்க முடியாமல் 6 விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

போகி பண்டிகை புகை மூட்டம்

தமிழகத்தில் நேற்று போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை முதலே பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு பழைய பொருட்களை போட்டு தீ வைத்து எரித்தனர். இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் புகை மூட்டமாக காணப்பட்டது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலும் புகை மண்டலமாக காட்சி அளித்ததால் விமானங்கள் தரை இறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சிங்கப்பூர், மஸ்கட், கொழும்பு, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த விமானங்கள் தரை இறங்க முடியாமல் பெங்களூரூக்கு திருப்பி விடப்பட்டன.

20 விமானங்கள் தாமதம்

இதேபோல் மலேசியா தலைநகர் கோலாலம்பூர், தோகா ஆகிய பகுதிகளில் இருந்து வந்த விமானங்கள் ஐதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டது.

மேலும் சென்னையில் இருந்து பெங்களூரூ, கொச்சி, ஐதராபாத், கவுகாத்தி, மும்பை போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய 20–க்கும் மேற்பட்ட விமானங்கள் சுமார் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.

சென்னையில் வானிலை சீரானதும் திருப்பி விடப்பட்ட 6 விமானங்களும் மீண்டும் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.


Next Story