காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் பெண் உள்பட 19 பேருக்கு ஆயுள் தண்டனை
காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த 19 பேருக்கு ஆயுள் தண்டனை.
கோலார் தங்கவயல்
கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர் தொகுதியில் கடந்த 2008–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி வெற்றி பெற்றது. இதையொட்டி 2008–ம் ஆண்டு மே மாதம் 25–ந்தேதி ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் எஸ்.அக்ரஹாரா கிராமத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் வெற்றியை கொண்டாடியப்படி ஊர்வலமாக சென்றனர். அப்போது அந்த ஊர்வலத்தின்போது, ஜனதா தளம்(எஸ்) கட்சியினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலின்போது, காங்கிரஸ் கட்சி பிரமுகர் பெருமாளப்பா (வயது 27) என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கோலார் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த ஒரு பெண் உள்பட 24 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது போலீசார் மீது கோலார் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
19 பேருக்கு ஆயுள் தண்டனைஇந்த வழக்கு விசாரணை கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக கோலார் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது 2 பேர் இறந்துவிட்டனர். மீதமுள்ள 22 பேர் மீது போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி வடவட்டி நேற்று தீர்ப்பு வழங்கினார். அப்போது, 3 பேருக்கு இந்த வழக்கில் தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து நீதிபதி 3 பேரையும் விடுதலை செய்தார். மீதமுள்ள ராஜண்ணா, கிருஷ்ணப்பா, கோவிந்தராஜ், சந்திரப்பா, கோபாலப்பா, லோகேஷ், நாராயணசாமி, எஸ்.வி.கிருஷ்ணப்பா, மற்றொரு நாராயணசாமி, வெங்கடப்பா, ரமேஷ் மற்றும் ஒரு பெண் உள்பட 19 பேருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதி அவர்கள் 19 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.