பெங்களூருவில் திருவள்ளுவர் தின ஊர்வலம் சித்தராமையா நாளை தொடங்கிவைக்கிறார்
பெங்களூருவில் திருவள்ளுவர் தின ஊர்வலம் நாளை நடக்கிறது. சித்தராமையா தொடங்கி வைக்கிறார்.
பெங்களூரு,
பெங்களூருவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருவள்ளுவர் தினம் மற்றும் தமிழ்மொழி பேசும் கன்னடர்களின் தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று காலை 9 மணிக்கு அல்சூர் ஏரிக்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்–மந்திரி சித்தராமையா மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.
பின்னர் அவர் திருவள்ளுவர் தின ஊர்வலத்தை தொடங்கிவைக்கிறார். இந்த ஊர்வலம் காமராஜர் ரோடு, கமர்சியல் தெரு, திம்மய்யா ரோடு, செப்பிங்ஸ் ரோடு, நந்தி துர்கா ரோடு வழியாக மீண்டும் திருவள்ளுவர் சிலையை வந்தடைகிறது.
மாநாடுஅதைதொடர்ந்து ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ். பள்ளிக்கூடம் அருகே தமிழ் மொழி பேசும் கன்னடர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டை கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பரமேஸ்வர், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் செல்லக்குமார், கர்நாடக காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் தினேஷ்குண்டுராவ் ஆகியோர் தொடங்கிவைக்கிறார்கள்.
இதில் முதல்–மந்திரி சித்தராமையா, மந்திரிகள் கே.ஜே.ஜார்ஜ், ராமலிங்கரெட்டி, ரோஷன் பெய்க், எம்.கிருஷ்ணப்பா, கிருஷ்ணபைரேகவுடா, யு.டி.காதர், டி.கே.சிவக்குமார், ஏ.மஞ்சு மற்றும் கே.எச்.முனியப்பா எம்.பி, பெங்களூரு மேயர் பத்மாவதி, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் விஜயதாரணி எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், காங்கிரஸ் பிரமுகர்கள், பெங்களூரு தமிழ்ச்சங்கத்தினர் மற்றும் அனைத்து தமிழ் அமைப்பினரும் கலந்துகொள்கிறார்கள்.
மேலும் விழாவில் பெங்களூரு, பெங்களூரு புறநகர், ராமநகர், சாம்ராஜ்நகர், மண்டியா, மைசூரு, குடகு, ஹாசன், சிக்கமகளூரு, கோலார் தங்கவயல், சிவமொக்கா, பத்ராவதி, உப்பள்ளி உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் பங்கேற்கிறார்கள்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கர்நாடக மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பிரகாசம், எம்.சி.ஏ. சேர்மன் ரகுதேவராஜ், டி.ரமேஷ், ஜி.ராஜேந்திரன், விஸ்வநாத், மகேஸ்வர் மற்றும் திருவள்ளுவர் ஜெயந்தி விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.