பொங்கல் பொருள் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
பொங்கல் பொருட்கள் வழங்கப்படாததை என்பதை அன்சாரிநகரை சேர்ந்த மக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை
தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படாததை என்பதை கண்டித்து மதுரை மகபூப்பாளையம் அன்சாரிநகரை சேர்ந்த பொதுமக்கள் நேற்று அங்குள்ள பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் 1 மணி நேரம் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.எஸ்.காலனி போலீசார், போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீஸ்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் கூறும்போது, இங்குள்ள 2–வது குறுக்கு தெருவில் ரேஷன் கடை அமைந்துள்ளது. இங்குள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு சரிவர ரேஷன் பொருட்கள் கிடைப்பதில்லை. தற்போது தமிழக அரசு பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. ஆனால் இந்த ரேஷன் கடையில் மட்டும் இதுவரை பொங்கல் பொருட்கள் வழங்கப்படாமல் இருக்கிறது. இங்குள்ள ஊழியரை மாற்ற வேண்டும் என்றனர்.