ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி அவனியாபுரத்தில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அவனியாபுரம்
அவனியாபுரம்
அவனியாபுரத்தில் ஆண்டு தோறும் பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். ஆனால் ஜல்லிக்கட்டுக்கு தடை போடப்பட்டுள்ளதால், இந்த பகுதி பொதுமக்கள், மாடுபிடி வீரர்கள், காளை வளர்ப்போர் என்று பலதரப்பட்ட மக்கள் கவலையடைந்துள்ளனர். இந்தநிலையில் ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி அவனியாபுரம் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மாநகர தெற்கு மாவட்ட துணை செயலாளர் எஸ்.ஆர்.கோபி தலைமை தாங்கினார். முன்னால் கவுன்சிலர் போஸ்முத்தையா முன்னிலை வகித்தார். இதில் அவனியாபுரம் பகுதி கழக தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து அவனியாபுரத்திற்கு வந்திருந்த பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் ஜல்லிக்கட்டை நடத்தக் கோரி சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அவர்களுடன் தி.மு.க.வினரும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீஸ் உதவி கமிஷனர் முத்துக்குமார், அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் நல்லு உள்ளிட்ட போலீசார் தி.மு.க.வினர், கல்லூரி மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்தவர்களை கலைந்து போக செய்தனர்.
திருப்பரங்குன்றம்திருப்பரங்குன்றம் பதினாறுகால் மண்டபம் அருகே கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் சார்பில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி மாணவர் சித்துராஜ் தலைமை தாங்கினார். மாணவர்கள் நீர்காத்தலிங்கம், ராஜா, ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மேலும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை இரவோடு இரவாக செல்லாது என்று அறிவித்தது போல, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு இரவோடு இரவாக புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசுக்கு மாணவர்கள் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் மகாராஜன், கவிஞர் ஜீவா ஆர்ப்பாட்டகுழு ஒருங்கிணைப்பாளர்கள் மதன், விமல், நாகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரி நேற்று காலையில் கல்லூரி மாணவர்கள் ஆர்பாட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தினர். மதுரை பசுமலை மூலக்கரை பஸ்நிறுத்தத்தில் சவுராஷ்டிராகல்லூரி மற்றும் மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரி மாணவர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். அவர்கள் நடப்பு ஆண்டிலே ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து அவர்கள் ஊர்வலமாக சென்றனர்.