ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மதுரையில் 5–வது நாளாக கல்லூரி மாணவர்கள் ஊர்வலம்


ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மதுரையில் 5–வது நாளாக கல்லூரி மாணவர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 14 Jan 2017 5:29 AM IST (Updated: 14 Jan 2017 5:29 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி மதுரையில் 5–வது நாளாக கல்லூரி மாணவர்கள் ஊர்வலம் சென்றனர்.

மதுரை,

மாணவர்கள் ஆதரவு

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி வழங்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய–மாநில அரசுகள் எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் கடந்த 4 தினங்களாக கல்லூரி மாணவ–மாணவிகள், மாணவர் அமைப்பினர், அறக்கட்டளையை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலர் போராட்டம் நடத்தினர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் 5–வது நாளாக நேற்றும் போராட்டம் நடத்தினர். இதற்காக அவர்கள் நேற்று காலை மதுரை தமுக்கம் மைதானம் முன்பு திரண்டனர்.

சுப்பிரமணியசாமிக்கு கண்டனம்

பின்னர் அவர்கள் அங்கிருந்து கோரிப்பாளையம், பனகல்சாலை வழியாக கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். ஊர்வலத்தின் போது, பீட்டா அமைப்பை கண்டித்தும், மோடி அரசை கண்டித்தும் வாசகங்கள் எழுதிய பதாகைகளை மாணவர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்தனர்.

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டால் தமிழகத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தவேண்டும் என்று கூறிய சுப்பிரமணியசாமியை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

கலெக்டர் அலுவலகம் அருகில் சென்றதும் மாணவர்கள் கோ‌ஷமிட்டு கலைந்து சென்றனர்.


Next Story