மனசெல்லாம் மலர்விழி - சுப்ரஜா


மனசெல்லாம் மலர்விழி - சுப்ரஜா
x
தினத்தந்தி 14 Jan 2017 8:03 AM IST (Updated: 14 Jan 2017 8:03 AM IST)
t-max-icont-min-icon

காரணம் வேறு ஒன்றும் இல்லை. பக்கத்து டவுனில் புதியதாய் தொழில் தொடங்கியிருக்கும் பலசரக்கு மையம்

க்கத்து டவுனில் புதியதாய் தொழில் தொடங்கியிருக்கும் பலசரக்கு மையம் ஒன்று கிராமத்தில் பொங்கல் கோலப் போட்டி நடத்துவதாக அறிவித்திருந்தது. லோக்கல் தொலைக்காட்சி, பத்திரிகைச் செய்திகள், துண்டு பிரசுரங்கள் போன்றவை பெண்கள் அனைவரையும் அதில் கலந்துகொள்ள அழைத்துக் கொண்டிருந்தது.

பொங்கல் அன்று மாலை ஏழு மணிக்கு வரும் கலெக்டர் அவற்றை பார்த்து சிறந்த கோலங்களை தெரிவு செய்வார்.

ரொக்கப் பரிசுகளும், பல மாதங்களுக்கான இலவச மளிகை சாமான் கூப்பன்களும் உண்டு.

புதுமையான போட்டி.

கிராமத்து பெண்களுக்கு கேட்கவா வேண்டும். ஆளாளுக்கு வீட்டில் கூடி திட்டம் போட ஆரம்பித்து விட்டார்கள்.

‘நீ இப்படி போடு, நான் அப்படி போடுகிறேன்’ என்று.

மலர்விழி பன்னிரெண்டாவது படிப்பவள். அப்பா கிடையாது.

வீட்டில் மூன்று பசு மாடுகள் உண்டு. அதில் பால் கறந்து விற்று வரும் வருமானத்தில்தான் காலம் ஓடுகிறது.

மலர்விழி படிப்பில் சுட்டி. அதிகாலையில் எழுந்து அம்மாவுக்கு உதவி செய்து, பால் கறக்கும் வரை பாத்திரம் மாற்றிக் கொடுத்து பக்கத்து ஊர் டீ கடை வரை கொண்டு போய் ஊற்றி வருவாள். அதன் பின்பு பள்ளிக்கு கிளம்பிச் செல்வாள். அவள் மெல்ல அம்மாவிடம் ஆரம்பித்தாள்.

“அம்மா?”என்றாள் மெல்லிய குரலில்.

“என்னடி புதுசா ராகம் பாடுதே”

“நானும் போட்டியில கலந்துக்கறேன்ம்மா”

“என்ன போட்டியில?”

“நீ வேற ஊரே அமர்க்களப்படுதேம்மா... கோலப் போட்டி”

“பார்த்தேன், நானும் நோட்டீசு பார்த்தேன். நமக்கு எதுக்கு அதெல்லாம். நீ எட்டுப் புள்ளி கோலம் எல்லாம் போடவே தடுமாறுவே, உனக்கெதுக்கு இந்த வேலையெல்லாம். அதெல்லாம் வேண்டாம், உன்னோட வேலையைப் பாரு” என்று சொல்லி விட்டாள்.

மலர்விழிக்கு வருத்தம்தான்.

எப்படியாவது அம்மாவிடம் சம்மதம் வாங்க வேண்டும். இறங்கிப் போய் கெஞ்சினால் அம்மா வழிக்கு வருவாள்.

அன்று பால் ஊற்றி விட்டு வந்ததும் சாப்பிட உட்கார்ந்தாள்.

அம்மாக்காரி தட்டில் சூடாய் இட்லியும், சாம்பாரும் ஊற்றினாள்.

நல்ல சுவை.

“அம்மா வழக்கத்தைவிட இன்னைக்கு சாம்பார் சூப்பரா இருக்கு. எங்கிட்ட மட்டும் காசு இருந்ததுன்னு வச்சுக்கயேன், உன்னோட விரலுக்கு ஒரு தங்க மோதிரம் வாங்கிப்போடுவேன். சரிதான். மோதிரம் வாங்கற அளவுக்கு எங்கிட்ட எங்கே பணம் இருக்கு?” என்று அங்கலாய்த்தாள்.

“என்னடி! வழக்கமான இட்லி சாம்பார், எதுக்கு நீ இப்ப பீடிகை போடறே?” என்றாள்.

“அம்மா நான் ஐம்பது வீடுகளுக்கு மேலே பால் ஊத்துறேன். எல்லாத்துக்கும் மேலே நான் போற வழியில இருக்கற கோலத்தை எல்லாம் ரசிக்கிறேன். நான் நிச்சயம் போட்டியில ஜெயிப்பேம்மா?”

“சரி அதுக்கு கோலப்பொடி கலர் கலரா வாங்க காசு வேணும். அதுக்கு என்னப் பண்ண போறே?”

“நீ எனக்கு கொடுக்கற பணத்துல சேர்த்து வச்சிருக்கேன்ம்மா?”

“உன் இஷ்டம். கலந்துக்க. போட்டியில கோலம் போடறேன்னு பால் ஊத்தறதை அன்னைக்கு லேட் ஆக்கிடாதே” என்றாள்.

தான் கோலப் போட்டியில் கலந்துகொள்ளப் போவதை சில தோழிகளிடம் சொல்ல, அவர்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள்.

அவள் அதை கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.

போட்டி அன்று ஊரே பரபரப்பாக இருந்தது.

சீக்கிரமே எழுந்தவள் வாசலைப் பெருக்கி தண்ணீர் தெளித்தாள்.

பாலை அவசர அவசரமாய் ஊற்றி விட்டு வந்து கோலம் போட ஆரம்பித்தாள்.

ஒரு மணி நேரத்தில் அவளின் கோலம் கொஞ்சம், கொஞ்சமாக உருப்பெற ஆரம்பித்தது. ஏராளமானவர்கள் கோலம் போட்டிருந்தார்கள்.

நேரம் விறுவிறுப்பாக சென்றது.

மாலை நேரம்! கலெக்டர் தனிக் காரில் வந்து இறங்கினார்.

ஒவ்வொரு கோலத்தையும் நின்று நிதானமாய் பார்த்தார்.

அவருடன் போட்டிக்கு அழைப்பு விடுத்திருந்த அங்காடி ஆட்களும் வந்திருந்தனர்.

கலெக்டருடன் வந்த கேமரா மேன் தனித்தனியாக போட்டோ எடுத்து கொண்டிருக்க அங்காடி ஆட்களுடன் வந்திருந்த விளம்பர நிறுவனத்தினரும் பாய்ந்து, பாய்ந்து பல கோணங் களில் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

கலெக்டருக்கு தனி மேடை அமைக்கப்பட்டிருந்தது.

அவர் புகைப்படங்களை பரிசீலிக்க ஒரு மணி நேரம் ஆகும் என்று அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.

அங்காடி ஆட்கள் ஒட்டு மொத்த கிராமத்திற்கும் சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், வடை என வண்டிகளில் சுடச் சுட கொண்டு வந்து பரிமாறினார்கள்.

நேரம் ஆக ஆக கோலம் போட்டு காத்திருந்த பெண்களின் முகத்தில் பதற்றம்!

பரிசு யாருக்கு கிடைக்கப் போகிறதோ?

யாருக்கு கிடைக்க வேண்டும் என்பதைவிட யாருக்கு கிடைக்கக் கூடாது என்று சில பெண்கள் நினைக்காமல் இல்லை.

அங்காடி உரிமையாளர் கிராமத்து மக்கள் அனைவரையும் மேடையின் முன் வந்து நாற்காலிகளில் அமரச் சொன்னார்.

எல்லோர் முகத்திலும் பரபரபப்பு.

கலெக்டர் எழுந்தார்.

“என்னோட பெயர் கீதா. நான் ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் இங்கே கலெக்டரா வந்தேன். நானும் நல்லா கோலம் போடுவேன். கலெக்டர் கலந்துக்க கூடாதுன்னு அவங்க சொல்லலை. இருந்தாலும் இளைய தலைமுறை பெண்கள் தங்களோட திறமையை வெளிக் கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் இது. அதுவும் பரிசோட வருதுன்னா சொல்லவா வேணும். எனக்கு இதுல கலந்து கிட்டதுல ரொம்ப சந்தோஷம். மயிலாப்பூர்ல மார்கழி மாசம் முழுக்க வீட்டு வாசல்ல கோலம் போட்டு நடுவில பரங்கிப் பூ வைப்போம். அதுக்கப்புறம் பரங்கிப் பூவை இங்கேதான் பார்க்கிறேன்.

நான் இந்த அங்காடி அதிபர் கேட்டதும் உடனே ஒப்புதல் தந்ததற்கு காரணம் முதல்ல இந்த கிராமத்தைப் பார்க்கலாம், மக்களை சந்திக்கலாம்ன்னு தான். இந்த ஒரு மணி நேரம் ஒவ்வொரு கோலப் போட்டோக்களையும் ஆராய்ஞ்சு மூன்று பரிசுக்குரியவர்களை தேர்ந்துஎடுத்து இருக்கோம். முதல்ல மூன்றாவது பரிசுல இருந்து ஆரம்பிக்கிறேன். இதுல முதல், இரண்டு, மூணுன்னு நினைக்க வேண்டாம். எல்லாமே சிறப்பா இருந்தது. இருந்தாலும் போட்டின்னு அறிவிச்சதால இப்படி கொடுக்கறோம். எல்லோருக்கும் வாழ்த்துகள். முதல்ல மூன்றாம் பரிசு மஞ்சுளா செல்வதுரை, மேல வீதி. இவங்க போட்ட கோலம் பாரம்பரிய காளைமாடு பிடித்தல். இருபத்தஞ்சாயிரம் ரொக்கம் மற்றும் மூன்று மாதத்திற்கான மளிகை கூப்பன்”

கூடியிருந்தவர்கள் கரகோஷம் எழுப்பி ஆர்ப்பரித்தார்கள்.

மஞ்சுளா செல்வதுரை மேடையேறி பரிசினை கலெக்டரிடம் வாங்கும் போது கைத்தட்டல்கள் பறந்தன.

“அடுத்து இரண்டாவது பரிசு, தங்கராணி தங்கவேல். இவங்க வரைஞ்சது ஒரு மயில் கூட்டம். ரொம்ப தத்ரூபமா இருந்தது. இவங்களுக்கு ஐம்பதாயிரம் ரொக்கம் மற்றும் ஆறு மாதத்திற்கான மளிகைப் பொருட்கள் கூப்பன், வாழ்த்துகள்” என்று கூறி பரிசுகளை வழங்கினார்.

“அடுத்து, நீங்கள் மிக ஆவலுடன் எதிர்பார்க்கும் முதல் பரிசு சாருலதா தணிகைராஜ். இவங்களுக்கு முதல் பரிசு ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் ஒரு வருடத்திற் கான மளிகை கூப்பன்” என்றதும் கூட்டம் ஆர்ப்பரித்தது.

கலெக்டர் எல் லோருக்கும் பரிசுகளை வழங்கினார்.

சில பெண்கள் மலர்விழியை அலட்சியமாகப் பார்த்தனர்.

எல்லோரும் எழுந்திருக்க ஆரம்பிக்க ‘ஒரு நிமிஷம்’ என்றார் கலெக்டர்.

எல்லோரும் மீண்டும் அமர்ந்தார்கள்.

“நானும் அங்காடி ஓனர் மனைவியும் தீவிரமா பார்த்ததுல ஒரு ஸ்பெஷல் படம் கண்ணுல பட்டது. அது எங்க மனசை விட்டு இறங்கவேயில்லை. அந்தப் படத்தை கோலமாக வரைஞ்ச பெண்ணுக்கு சிறப்பு பரிசு இரண்டு லட்சம் மற்றும் ஐந்து வருடத்துக்கு மளிகை கூப்பன் வழங்க முடிவு பண்ணியிருக்கோம். அந்தப் பெண் ஏன் அந்த படத்தை கோலமா வரைஞ்சான்னு தெரியலை. அவங்களே மேடைக்கு வந்து விளக்கம் சொன்னா நல்லா இருக்கும்” என்று நிறுத்தினார்.

ஒட்டு மொத்த கூட்டமும் ‘யார் யார்’ என்று நாலாபுறமும் பார்த்தது.

கலெக்டர் சிரித்துக் கொண்டே, “ஏன் இந்த சஸ்பென்ஸ். நானே சொல்றேன், மலர்விழி வினாயகம்” என்றார்.

மலர்விழி மெல்ல எழுந்தாள்.

தனது ஒற்றைக் கட்டைக் காலால் விந்தி விந்தி நடந்து மேடையேறினாள்.

கலெக்டர் அவள் தோளைத் தட்டி, “வாழ்த்துகள் மலர்விழி. முதல்ல உன்னைப் பத்தியும் உன்னோட படத்தைப் பத்தியும் சொல்லு” என்றார்.

மலர்விழி கண்கள் லேசாய் பணித்திருந்தன.

“மூணு தலைமுறையா நாங்க பால் வியாபாரம் தான் பண்ணிட்டு வர்றோம். இப்ப நானும் அம்மாவும் மட்டும் தான். அப்பா சில வருடங்கள் முன்பு ஆக்சிடெண்ட்ல இறந்துட்டார். நான் நிறைய செய்தி தாள் படிப்பேன். அதுல மடி காய்ஞ்ச மாடுகளை கறிக்கு லாரியில ஏத்திட்டுப் போகும் போது கண்ணுல தண்ணி வரும். என்னோட ஆசையெல்லாம் எப்படியாவது சின்ன நிலம் வாங்கி அதுல மடி மரத்துப்போன மாடுகளுக்கு கோசாலை அமைக்கறதுதான். எல்லாத்துக்கும் மேலே இந்த கிராமத்துல சரியான கழிவறை கிடையாது. அதனால தான் கோசாலை படமும், லாரியில மாடுகளை ஏத்திட்டு போற படமும் வரைஞ்சேன். நீங்க கொடுக்கப் போற ரெண்டு லட்சத்துல முதல்ல ஒரு கழிவறை கட்டுவேன். பக்கத்து கிராமத்துல ஒரு அனாதை ஆஸ்ரமம் இருக்கு. அதுக்கு நீங்க கொடுக்கப் போற மளிகை கூப்பனை கொடுப்பேன்” என்றாள்.

கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது.

கலெக்டர் கண்கள் கலங்க, “இந்த பரிசுகளை நீயே உன் குடும்பத்திற்கு பயன் படுத்திக்கொள். உன்னோட மேல் படிப்புக்கு உதவும். இங்கு கழிவறையை நானே பொறுப்பெடுத்து கட்டித் தர்றேன். அப் புறம்” என்றவர் அங்காடி முதலாளி பக்கம் திரும்பினார்.

“அந்த அனாதை ஆஸ்ரமத்துக்கும் இந்தப் பொண்ணு விருப்பப்படி மளிகை பொருட்கள் அனுப்பிடுங்க. உங்களுக்கு சங்கடம்ன்னா நான் அதுக்கு பணம் தர்றேன்” என்றார்.

அங்காடி முதலாளி, “வேண்டாம்மா நாங்களே காலம் முழுக்க தந்துடுறோம்” என்றார்.

“இப்ப சந்தோஷம் தானே மலர்விழி” என்று தோளைத் தட்டினார் கலெக்டர்.

கலெக்டர் மெல்ல மலர்விழியை அணைத்துக் கொள்ள கேமராக்கள் உள் வாங்கின.

நிகழ்ச்சியை பார்த்து ஒட்டு மொத்த கூட்டமும் மெய் சிலிர்த்து நின்றது.

Next Story