மக்களை கவரும் சலங்கை மாடு ஆட்டம்


மக்களை கவரும் சலங்கை மாடு ஆட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2017 8:06 AM IST (Updated: 14 Jan 2017 8:06 AM IST)
t-max-icont-min-icon

அந்த வகையில் பாகவத நடனம், பொம்மலாட்டம், தேவராட்டம், கோலாட்டம்,

ந்த வகையில் பாகவத நடனம், பொம்மலாட்டம், தேவராட்டம், கோலாட்டம், கரகாட்டம், காவடி ஆட்டம், கும்மி, மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, புலியாட்டம், தப்பாட்டம், தெருக்கூத்து, உருமியாட்டம் என ஏராளமான ஆடல், பாடல் கலைகள் காலமாற்றத்தில் கரைந்து போய் வருகிறது.

ஆனால் திருப்பூர் மாவட்டம் உடுமலை, குடிமங்கலம் பகுதிகளில் இன்றும் அந்த கலைகள் அழியாமல் நடந்து வருவது மகிழ்ச்சிக்குரியதாகும். மார்கழி மாதம் பிறந்து விட்டாலே இந்த பகுதி மக்கள் ஆட்டம், பாட்டத்துடன் தைப்பொங்கல் பண்டிகையை வரவேற்க தயாராகி விடுகிறார்கள். மார்கழி மாதத்தின் ஒவ்வொரு இரவும், ஊரின் நடுவில் உள்ள இடத்தில் கிராம மக்கள் ஒன்று கூடுவார்கள்.

திறந்த வெளியில் ஒலிக்கும் உருமி இசை அனைவரையும் மகிழ்ச்சியான மனநிலைக்கு கொண்டு வருகிறது. கொட்டும் பனியை பொருட்படுத்தாமல் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை உற்சாகத்துடன் அங்கே ஒன்றுகூடி விடுவார்கள். கால்களில் சலங்கை ஒலிக்க, தலைப்பாகையுடன் மைதானத்துக்கு இளைஞர்கள் வருவார்கள். உருமி இசைக்கு ஏற்ப காலில் கட்டியுள்ள சலங்கைகளை ஒலிக்கச்செய்து, தாள கதியுடன் தேவராட்டம் ஆடுவார்கள். அவர்களுடன் சிறுவர்களும், பெரியவர்களும் கலந்து ஆடும்போது அங்கே உற்சாகம் கரைபுரண்டு ஓடும்.

தேவராட்டத்தில் 32 அடவுகள் உள்ளன. ஒவ்வொரு அடவும் ஒவ்வொரு விதமாக மனிதனின் செயல்பாடுகளை உணர்த்தும் விதமாக உள்ளது. ஆட்டம் தொடங்கும் போது மெதுவாகவும், அதன் பிறகு வேகமாக உச்ச நிலையை அடைந்து பின்னர் மெதுவாக முடிகிறது. இது மிகச்சிறந்த உடற்பயிற்சியாகவும் விளங்குகிறது. நள்ளிரவு வரை தொடரும் இந்த ஆட்டத்தை பனியையும் மறந்து கிராம மக்கள் ரசிக்கிறார்கள்.

உடுமலையை அடுத்த எஸ்.அம்மாபட்டி, கொங்கல் நகர், லிங்கமாவூர், ஜல்லிப்பட்டி, கரப்பாடி, விருகல்பட்டி, பெரியகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு இணையாக எருது மறித்தல் எனப்படும் வீர விளையாட்டு நடத்தப் படுகிறது. இதை கிராம மக்கள் சலங்கை மாடு ஆட்டம், சலங்கெருது மறித்தல் என கூறுகிறார்கள்.

சலங்கை மாடு ஆட்டத்திற்கு தெய்வீக பின்னணி இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்..!

உழவர்கள் மாட்டுப்பொங்கலுக்கு மறுநாள், கன்றுகளை தெய்வங்களாக கருதி, உடுமலை அருகே சோமவாரப்பட்டியில் உள்ள ஆல்கொண்டமால் கோவிலுக்கு தானமாக வழங்குகிறார்கள். காளைகளை இறைவனுக்கு உரியதாக கருதும் கிராம மக்கள் அவற்றை தத்தெடுத்து சலங்கை மாடுகளாக பயிற்சி அளிக்கிறார்கள். அதன் அடையாளத்திற்காக காதுகளை சூலாயுதம் போல் ஆக்கி விலாப்புறங்களிலும், சூலாயுத முத்திரையை பதித்து விடுகிறார்கள். பின்னர் அதை நன்கு பழக்கி அதன் முன்னே நீளமான மூங்கில் கம்புகளை உயரமாக தூக்கி கொண்டும், காலில் சலங்கை கட்டிக்கொண்டும் களமிறங்குவார்கள். சலங்கை ஒலிக்கு ஏற்ப தலையை ஆட்டி பாயும் மாட்டை கையில் உள்ள குச்சிகளை அசைத்து அதன் கவனத்தை திருப்பி மறித்து நிற்க வைப்பார்கள். இதில் குச்சிகள் காளைகள் மேல் படாமல் லாவகமாக கையாளப்படுவதால் காளைகள் எந்த விதத்திலும் துன்புறுத்தப்படுவதில்லை.

தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் முக்கிய இடம் பிடிப்பது கும்மிப்பாட்டு. வட்டமாக வரிசைகட்டி பெண்கள் பாடும்போது, பெண்கள் குனிந்து நிமிர்ந்து கைகளால் தாளம் தட்டி தாளத்துக்கு ஏற்ப கால் நகர்த்தி வட்டமாக செல்கிறார்கள். இதில் பூந்தட்டு கும்மி, குலவை கும்மி என பல விதங்கள் உள்ளன. கும்மி பாடும் பெண்கள், கடவுளை வாழ்த்தியும், போர்களில் வெற்றி பெற்ற மன்னர்களை வாழ்த்தியும், சரித்திர சாதனை களையும் பாடலாக பாடுகிறார்கள்.

தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் இரவில் திரளும் மக்கள், தங்கள் உடலுக்கு சூடேற்றி பனியை விரட்டும் வகையில் தேவராட்டம், சலங்கை மாடு, கும்மிப்பாட்டு உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி இன்றளவும் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் மகிழ்ந்து வருகிறார்கள்.

செல்போன்களின் வரவால் உலகம் உள்ளங்கைக்குள் வந்து விட்டதாக கூறி முகநூல், வாட்ஸ்அப், டுவிட்டர் என மயங்கி கிடக்கும் இளைஞர்களின் மத்தியில் வீர விளையாட்டுக்கும், இசை நடனத்துக்கும் இன்றளவும் முக்கியத்துவம் கொடுக்கும் உடுமலை பகுதி கிராம மக்கள் நமது பாரம்பரிய பண்பாட்டு கலைகளை காப்பாற்றுவது மகிழ்ச்சி தரக்கூடியதாக உள்ளது.

-ந.சிவானந்தகுமார், சுப்பராயர்புரம்.

Next Story