மலைவாழ் மக்களின் ‘நாட்டியப் பொங்கல்’


மலைவாழ் மக்களின் ‘நாட்டியப் பொங்கல்’
x
தினத்தந்தி 14 Jan 2017 2:57 AM GMT (Updated: 2017-01-14T08:27:02+05:30)

மலைவாழ் மக்களின் ‘நாட்டியப் பொங்கல்’

லைகளின் இளவரசியான கொடைக்கானலின் கீழ்மலையில் அமைந்துள்ளது, மங்களம்கொம்பு. திண்டுக்கல்லில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமம் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் நிறைந்தது. இயற்கை அன்னையின் மடியில் தவழும் மங்களம்கொம்பு கிராமத்தில் இருந்து அழகு காட்சிகளை ரசித்தபடி சில நிமிடங்கள் நடைபோட்டால், ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் மலையக்காடு என்ற சிறு கிராமத்துக்கு செல்லலாம். இது மலைவாழ் மக்களின் வசிப்பிடம். சுற்றிலும் மரம், செடி, கொடிகள் அடர்ந்து படர்ந்திருக்க மத்தியில் ஒற்றை ராட்சத பாறையில் காட்சியளிக்கும் கூடாரங்கள் மலைவாழ் மக்களின் சொர்க்க பூமி. அங்கு 100 பளியர் இன மக்கள் குடும்பமாக வசிக்கிறார்கள்.

நாடோடிகளாக வாழ்ந்த மலைவாழ் மக்கள் நாகரிக வளர்ச்சியின் தாக்கத்தால் சக மனிதர்களை போல கூட்டமாக வாழத்தொடங்கினர். இதன் பலனாய் ஆங்காங்கே பதுங்கி வசித்தவர்களில் ஒரு பகுதியினர் மலையக்காட்டில் ஒன்று திரண்டனர். இப்படி உருவானதுதான் மலையக்காடு.

இந்த மலையக்காடு கிராமம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாகும். அதுவரை வன தேவதைகளை வணங்கி வந்த மலைவாழ் மக்கள், அதன்பிறகு தங்களுக்கென பளிச்சியம்மன் என்ற கடவுளை தோற்றுவித்தனர். பளிச்சியம்மனுக்காக ஊரின் ஒரு பகுதியில் கற்களை ஊன்றி சிறிய கோவில் அமைத்தனர். அந்த அம்மனுக்கு அதீத சக்தி இருப்பதாக கிராம மக்கள் கருதுகிறார்கள். பிணி வந்தாலும், பிரச்சினை வந்தாலும் பளிச்சியம்மனிடமே முதலில் முறையிடுகிறார்கள். வன விலங்குகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கவும் பளிச்சியம்மனிடம் வேண்டிக்கொள்வர்.

இவர்களது பொங்கல் கொண்டாட்டம் வித்தியாசமானது. அதிகாலையிலேயே துயில் எழுந்து குளிக்கும் மக்கள், புத்தாடை அணிந்து பொங்கல் வைக்கும் பணியை தொடங்குகிறார்கள். இவர்கள் தனித்தனியாக தங்களின் வீடுகளில் பொங்கல் வைப்பது கிடையாது. அனைவரும் கூட்டாக சேர்ந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இதற்காக பளிச்சியம்மன் கோவில் முன்பு கூடுகிறார்கள். பிறகு, பொங்கல் பாத்திரத்தில் குங்குமம், சந்தனம் தடவி, அம்மனை வேண்டி பொங்கல் வைக்கிறார்கள். பொங்கல் பொங்க தொடங்கியதும், பெண்களின் குலவை சத்தம் காதை பிளக்கிறது. தங்களின் பாரம்பரிய மேள, தாள வாத்தியங்கள் முழங்க பளிச்சியம்மனுக்கு முதல் பொங்கலை படைக்கிறார்கள்.

மலைவாழ் மக்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த நடனமாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்படி பொங்கல் கொண்டாட்டத்திலும் அந்த நடனம் பிரதான இடம்பிடிக்கிறது. மலைவாழ் மக்களிலேயே கைதேர்ந்தவர்கள் வாத்தியங்களை இசைக்க பெண்கள் நளினமாய் உடலை வளைத்து, நெளித்து நடனமாடுகிறார்கள். இதை மற்ற ஆண்களும், குழந்தைகளும் ஆர்வமுடன் ரசிப்பதோடு, நடனமாடுவோரை உற்சாகப்படுத்தவும் செய்கிறார்கள்.

அதன்பிறகு, வாழை இலையில் சுடச்சுட பொங்கலை பரிமாறி ஒற்றுமையாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள். காடே கதி என கிடந்த மலைவாழ் மக்களின் ‘கூட்டு’ பொங்கல், கொண்டாட்டங்கள் நிறைந்ததாய் நிறைவுபெறுகிறது.

Next Story