மயிலுக்கு போர்வை தந்தான் பேகன் மண்ணுக்கு போர்வை தந்தான் உழவன்


மயிலுக்கு போர்வை தந்தான் பேகன் மண்ணுக்கு போர்வை தந்தான் உழவன்
x
தினத்தந்தி 14 Jan 2017 8:32 AM IST (Updated: 14 Jan 2017 8:32 AM IST)
t-max-icont-min-icon

மயிலுக்கு போர்வை தந்தான் பேகன் மண்ணுக்கு போர்வை தந்தான் உழவன்

மிழர் வாழ்வில் தைத்திங்களுக்கு ஒரு மரியாதை உண்டு. ‘போனதெல்லாம் போகட்டும், வருவதாவது நலம் பயக்கும்’ என்ற நம்பிக்கையில்தான் தமிழர் அனைவரும் தை மாதத்தை வரவேற்பதற்காக தவமிருப்பது வழக்கம். அந்த நம்பிக்கையில் பிறந்ததுதான் ‘தைப்பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற பழமொழி. அந்தத் தை மகளை வரவேற்கும் திருநாள்தான் போகித்திருநாள்.

இயற்கையை இறைவனாகப் போற்றிய இனம் தமிழினம். வான் மழைக்குத் தலைவன் இந்திரன். இந்த இந்திரனுக்கு ஆண்டுதோறும் இருபத்தெட்டு நாட்கள் காவிரிப்பூம்பட்டினத்தில் தமிழர் விழா எடுத்துக்கொண்டாடியதை இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரமும், மணிமேகலையும் நமக்குக் காட்டுகின்றன.

இருபத்தெட்டு நாட்கள் இடையறாது விழா நடத்தும் நிலையில் இன்று நாம் இல்லை. மார்கழி மாதத்து இறுதி நாளை மட்டும் போகிப்பண்டிகை என்று இந்திரனுக்காகக் கொண்டாடுகிறோம். காலப்போக்கில் கழிக்க வேண்டியதைக் கழித்து, தீயிட்டுக்கொளுத்த வேண்டியதைக் கொளுத்தும் புகைப்பண்டிகையாக போகிப்பண்டிகை மாறிவிட்டது.

தை முதல் நாள் கொண்டாடும் பொங்கலுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு.

தார்க்கோலின் தயவில் செங்கோல் நடப்பதினால் ஏர்க்காலைத் தவிர எவர் காலையும் பிடிக்காதவர்கள்.

யார் இவர்கள் என்கிறீர்களா?

அவர்கள்தான் உழவர் பெருமக்கள். இந்த உழவர் பெருமக்கள் உழைப்பின் பயனை அனுபவித்துக்கொண்டாடும் திருநாளே உழவர் திருநாள். மயிலுக்குப் போர்வை தந்தான் பேகன். மண்ணுக்குப் போர்வை தந்தான் உழவன். ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்றான் எட்டயபுரத்து எழுச்சிக்கவிஞன் பாரதி. அந்த உழவனைப் போற்றும் நாள் தான் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாள்.

பொங்கி எழுந்த பொங்கலைத் தான் மகிழ்வதோடு தனக்கு வாழ்வளித்த மக்களோடு மாடுகளுக்கும் வைத்துக்கொண்டாடும் மனிதநேயத் திருநாள்தான். அதைத்தான் மாட்டுப்பொங்கல் என்று மகிழ்ச்சியோடு கொண்டாடி மகிழ்கின்றோம். இந்தப் பண்பாடு உலகத்தில் வேறு எங்கும் இல்லை.

பொங்கலுக்கு முதன்மையாய் இருக்கும் இந்த நெல் என்னும் சொல் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது. புறநானூற்றில் கோவூர்கிழார் பாடிய பாடல் ஒன்றில்,

வயலே! நெல்லின் வேலி நீடிய கரும்பின்

பாத்திப் பன் மலர் பூத்த - எனப் பாடியுள்ளார். அகநானூற்றுப் பாடலில் நக்கீரர்,

கள் ஆர் உவகைக் கலிமகிழ் உழவர்

காஞ்சி அம் குறுந்தறி குத்தி, தீம்சுவை

மென்கழைக் கரும்பின் நன் பல மிடைத்து

பெருஞ்செய் நெல்லின் பாசவல் பொத்தி

என்று நெல்லும் கரும்பும் சுவைத்து மகிழ்ந்த ஊரின் செழுமையை சிறப்பித்துப் பாடியுள்ளார்.

வருடத்துக்கு எத்தனை நாள்களோ, அத்தனை வகைகள் நெல்லுக்கு இருந்தன என்று பறைசாற்றுகின்றது தமிழ்ப் பழமொழி. இந்த நெல்லை அறுவடை செய்யும் நாள்தான் தைத்திருநாள். அந்த நாளே அறுவடைத்திருநாள் என்றும் போற்றப்படுகின்றது.

இது மட்டுமா? முதலாம் இராஜேந்திரன் சோழர் காலத்து திருவொற்றியூர் கல்வெட்டில் ‘புதியீடு’ என்ற குறிப்பு உள்ளது. ‘புதியீடு’ என்பதற்கு ‘முதல் அறுவடை’ என்று கல்வெட்டு ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதனால் அது பொங்கலையும் குறிப்பிடுகின்றது.

இப்படித்தான் தமிழர் பண்பாட்டில் தைப்பொங்கல் திருநாள் தமிழர் திருநாளாயிற்று. தமிழுக்கு எப்போது திருநாள் என்று கேட்கவும் தோன்றுகிறது. காரணம், வாசலில் கூட ‘ஹேப்பி பொங்கல்’ என்று ஆங்கிலத்தில் தான் வரவேற்கிறது வண்ணக்கோலம். தாய்மொழிதான் நமது பண்பாட்டின் அடையாளம். தைத்திருநாள் தமிழரின் அடையாளத்திருநாள்.

‘பொங்கல்’ என்றால் உணவில் ஒருவகை என்று மட்டுமே அறிந்து வைத்திருப்போரே, உங்களுக்காக ஒரு சொல். பொங்கலுக்கு ‘பொங்குதல்’ என்ற ஒரு பொருளும் உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்.

தமிழ் உணர்வு எங்கும் பொங்கட்டும் என்று பொங்கி எழுவோம். வாசல் தோறும் தமிழ்ப் பொங்கல் பொங்கட்டும்.

- பேராசிரியர்.க.இராமச்சந்திரன், அருப்புக்கோட்டை.

Next Story