நடத்தையில் சந்தேகம்: பெண் கழுத்தை அறுத்துக்கொலை
நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், பெண் கழுத்தை அறுத்துக்கொலை செய்யப்பட்டார்
ஸ்ரீகாளஹஸ்தி,
ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த கே.வி.பி.புரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணய்யா (வயது 45), ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி அமுதா (40). இருவருக்கும், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகள்கள் உள்ளனர். அமுதா நகரி அருகே உள்ள ஒரு நூற்பாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அமுதாவின் நடத்தையில் கிருஷ்ணய்யாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த ஒரு மாதமாக அமுதா நூற்பாலைக்கு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முடிந்ததும் இருவரும் தூங்கச்சென்று விட்டனர். அமுதா தூங்கிகொண்டிருந்தபோது, கிருஷ்ணய்யா அரிவாளை எடுத்து வந்து அமுதாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். கழுத்தை அறுக்கும்போது அமுதா கூச்சலிட்டு அலறினார். அவரின் அலறல் சத்தத்தை கேட்டதும், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதறி அழுதனர்.
போலீஸ் விசாரணைஇதுகுறித்து கே.வி.பி.புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்–இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய்நாத் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அமுதாவின் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சத்தியவேடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சித்தூரில் இருந்து துப்பறியும் நாய் வரவழைக்கப்பட்டது. அது, சம்பவம் நடந்த இடத்தில் மோப்பம் பிடித்தவாறு சுற்றி சுற்றி வந்து வீட்டில் இருந்து வெளியே ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. சித்தூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், கொலை நடந்த வீட்டில் பதிந்திருந்த கைரேகையை பதிவு செய்தனர். தலைமறைவான கிருஷ்ணய்யாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.