வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை வழங்க வேண்டும்
போளூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.வி.சேகரன் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒரு கோரிக்கை மனு
போளூர்,
போளூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.வி.சேகரன் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–
போளூர் தொகுதியில் எப்போதும் இல்லாத வகையில் தற்போது பருவமழை பொய்த்ததால் நிலத்தடி நீர் வற்றி ஆற்றுப் பாசனம், ஏரிப்பாசனம் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் சாகுபடி செய்த நெல், கரும்பு, மணிலா, வாழை, மக்காச்சோளம், சிறுதானிய தோட்டப்பயிர்கள், பூவகை சாகுபடிகள் மற்றும் இதர வேளாண் பயிர்களும் காய்ந்து வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மிகவும் கஷ்டமான சூழ்நிலையை சந்தித்து வருகின்றனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழக அரசின் உயர்மட்டக்குழு வந்து பார்வையிட்டனர்.
போளூர் தொகுதியில் வசூர் ஊராட்சியில் மட்டுமே வறட்சியால் பயிர்கள் பாதித்த பகுதியை பார்வையிட்டு உள்ளனர். பாதித்த ஏனைய பகுதிகளை அவர்கள் பார்க்கவில்லை.
வறட்சியில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அறிவிக்கின்ற நிவாரண தொகையை எந்தவித பாகுபாடு பார்க்காமல், அலைக்கழிக்காமல் உடனடியாக நேரடியாக காசோலையாக வழங்க வேண்டும். வறட்சியினால் அகால மரணமடைந்த விவசாயிகள் குடும்பங்களுக்கும் அரசின் நிதி உதவித் தொகையை வழங்க வேண்டும்.
விவசாயிகள் வாங்கிய வேளாண்கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்வதுடன் கூட்டுறவு மற்றும் வங்கியில் வாங்கிய இதர கடன்களை நீண்டகால கடனாக மாற்றி அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.