சின்னமனூர் அருகே, காவலாளியை தாக்கி முந்திரி தொழிற்சாலையில் திருட்டு
சின்னமனூர் அருகே, காவலாளியை தாக்கி முந்திரி தொழிற்சாலை
சின்னமனூர்,
திருப்பூர் புதுத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன் அஸ்வின் (வயது 37). இவர் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் பகுதியில் முந்திரி தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகையையொட்டி அஸ்வின் தொழிற்சாலையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
குச்சனூர் பகுதியை சேர்ந்த காவலாளி குப்பமுத்து தொழிற்சாலையை பாதுகாத்து வந்தார். இதற்கிடையில் இரவு வேளையில் குப்பமுத்து வீட்டிற்கு சாப்பிட சென்றார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் தொழிற்சாலையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் சாக்கு மூட்டைகளில் இருந்த முந்திரி கொட்டைகளை திருடி கொண்டிருந்தனர்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சுஅந்த நேரம் பார்த்து குப்பமுத்து தொழிற்சாலைக்கு வந்தார். அப்போது அங்கு முந்திரி கொட்டைகளை மர்மநபர்கள் திருடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் கூச்சல் போட்டு அவர்களை பிடிக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள், அவரை தாக்கி விட்டு முந்திரி கொட்டகைகளை திருடி கொண்டு தப்பி சென்றனர்.
இதில், பலத்த காயம் அடைந்த குப்பமுத்துவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அஸ்வின் சின்னமனூர் போலீசில் புகார் செய்தார். அதில், 240 கிலோ முந்திரி கொட்டைகளை மர்மநபர்கள் திருடி சென்றதாகவும், அதன் மதிப்பு ரூ.1 லட்சம் என்றும் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காவலாளியை தாக்கி விட்டு முந்திரி கொட்டகைளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.