பாலக்காடு–திருச்செந்தூர் ரெயிலில் பெட்டிகளின் எண்ணிக்கை குறைப்பு


பாலக்காடு–திருச்செந்தூர் ரெயிலில் பெட்டிகளின் எண்ணிக்கை குறைப்பு
x
தினத்தந்தி 16 Jan 2017 12:56 AM IST (Updated: 16 Jan 2017 12:56 AM IST)
t-max-icont-min-icon

பாலக்காட்டில் இருந்து பழனி வழியாக திருச்செந்தூருக்கு தினசரி பாசஞ்சர் ரெயில் இயக்கப்படுகிறது.

பழனி,

பாலக்காட்டில் இருந்து பழனி வழியாக திருச்செந்தூருக்கு தினசரி பாசஞ்சர் ரெயில் இயக்கப்படுகிறது. பாலக்காட்டில் அதிகாலை 4 மணிக்கு புறப்படும் ரெயில் பழனி, திண்டுக்கல், மதுரை வழியாக சென்று மாலை 4 மணிக்கு திருச்செந்தூரை அடைகிறது. இதே போல் மறு மார்க்கத்தில் காலை 11 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்படும் ரெயில் இரவு 11 மணிக்கு பாலக்காட்டை சென்றடைகிறது. இந்த இரு ரெயில்களிலும் மொத்தம் 13 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன.

திருவிழா காலங்களில் இந்த ரெயில்களில் கூட்டம் அலைமோதும். பயணிகளுக்கு நிற்கக்கூட சரியாக இடம் கிடைக்காமல் இருப்பதாகவும், கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் ஏற்கனவே ரெயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தற்போது அந்த ரெயில்களில் 2 பெட்டிகளை ரெயில்வே நிர்வாகத்தினர் குறைத்துள்ளனர். தைப்பூச திருவிழாவையொட்டி பழனிக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில் ரெயில்வே நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை பக்தர்களை மிகவும் அவதிக்குள்ளாக்கும் விதமாக உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே தற்போது குறைக்கப்பட்டுள்ள 2 பெட்டிகளை மீண்டும் இணைப்பதோடு மேலும் 2 பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story