அனைவருக்கும் சிறந்த மருத்துவம் கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டும்
அனைவருக்கும் சிறந்த மருத்துவம் கிடைக்கும் வகையில் பெரிய ஆஸ்பத்திரி பணியாளர்கள் செயல்பட வேண்டும்
மதுரை,
மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஆஸ்பத்திரி டீன் வைரமுத்துராஜூ தலைமை தாங்கினார். துணை முதல்வர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார். அனைத்துத்துறை பேராசிரியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், நிலைய மருத்துவ அதிகாரி, கண்காணிப்பாளர், நர்சுகள், பணியாளர்கள், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் என 500–க்கும் மேற்பட்டவர்கள் விழாவில் கலந்து கொண்டனர். ஆஸ்பத்திரியின் பிரதான நுழைவுவாயில் பகுதியில் பொங்கல் வைக்கப்பட்டது.
விழாவில் டீன் வைரமுத்து ராஜூ பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
பொங்கல் பண்டிகையில் இருந்து ஒவ்வொருவரும் ஏற்கனவே பணிக்கு வரும் நேரத்தை விட ½ மணி நேரத்திற்கு முன்னதாக பணிக்கு வருவேன் என்ற சபதத்தை ஏற்க வேண்டும். இதனால் மக்களுக்கு நம்முடைய சேவை விரைவாகவும், முழுமையாகவும் சென்றடையும். ஆஸ்பத்திரியில் சுகாதாரம் 100 சதவீதம் முழுமையடைய இனி வரும் காலங்களில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். மனதில் நேர்மை என்ற கொள்கையுடன் அனைவரும் செயல்பட வேண்டும். அனைவருக்கும் சிறந்த மருத்துவம் கிடைக்கும் வகையில் ஆஸ்பத்திரி பணியாளர்கள் செயல்பட உறுதியேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விளையாட்டு போட்டிகள்இதேபோன்று மருத்துவக்கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் டீன் வைரமுத்து ராஜூ, துணை முதல்வர் மீனாட்சி சுந்தரம், டாக்டர்கள் மோகன்குமார், தனலெட்சுமி, ஜெகதீஸ்வரி, ஆய்வக பொறுப்பாளர்கள் பாலகிருஷ்ணன், சரவணன் உள்பட கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக திரைப்பட பின்னணி பாடகர் மதிச்சியம் பாலா கலந்து கொண்டார். அவர் மாணவ–மாணவிகள் மத்தியில் பாடல்களை பாடி சமத்துவ பொங்கலை கொண்டாடினார். பின்னர் மாணவ–மாணவிகளுக்கு தனித்தனியே கயிறு இழுக்கும் போட்டி உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.