வறட்சி பாதிப்புக்கு இடைக்கால நிவாரணம் அறிவிக்கப்படும் நாராயணசாமி தகவல்


வறட்சி பாதிப்புக்கு இடைக்கால நிவாரணம் அறிவிக்கப்படும் நாராயணசாமி தகவல்
x
தினத்தந்தி 16 Jan 2017 4:30 AM IST (Updated: 16 Jan 2017 2:55 AM IST)
t-max-icont-min-icon

புதுவை மாநிலத்தில் ஏற்பட்ட வறட்சி பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் கணக்கெடுத்து வருகிறார்கள்.

பாகூர்,

அதுபற்றி சட்டசபையில் விவாதித்து வறட்சி பாதிப்புக்கு இடைக்கால நிவாரணம் அறிவிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

சமத்துவ பொங்கல் விழா

புதுச்சேரி மாநிலம் பாகூரை அடுத்த கன்னியக்கோவில் கிராமத்தில் உள்ள பச்சைவாழியம்மன் கோவில் திடலில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு, பாப்ஸ்கோ சேர்மன் தனவேலு எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு, பொது மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.

இதில் பாகூர், கன்னியக்கோவில், காட்டுக்குப்பம், மதிகிருஷ்ணாபுரம், மணப்பட்டு, பரிக்கல்பட்டு உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டு, பொங்கல் வைத்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை முத்தாலம்மன் அறக்கட்டளை தலைவர் அசோக் ஷிண்டே மற்றும் செந்தில்குமார், நாராயணன், ஜீவகணேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

கணக்கெடுப்பு நடக்கிறது

விழா முடிவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறுகையில் “தமிழர்களின் பண்டிகைகளில் மிக முக்கியமானது பொங்கல் பண்டிகையாகும். புதுச்சேரி மாநிலம் மதசார்பற்ற மாநிலம் என்பதால்தான் பொங்கல் பண்டிகையை இங்கு சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடுகிறோம்” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “புதுச்சேரி மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி குறித்து, வருவாய் துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். அதில் கிடைக்கும் விவரங்களை சட்டசபை கூட்டத்தில் விவாதித்து, வறட்சி பாதிப்புக்கு இடைக்கால நிவாரணம் குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும். அதன்பின், மத்திய அரசிடமிருந்து நிவாரணம் பெற்றுத்தரப்படும்” என்றார்.

பாரதியார் பல்கலைக்கூடம்

புதுவை அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் அரியாங்குப்பத்தில் பாரதியார் பல்கலைக்கூடம் இயங்குகிறது. இங்கு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அப்போது மாணவ-மாணவிகளுக்கு இடையே கோலப்போட்டி, உறிஅடித்தல், கயிறு இழுத்தல், பாயும் புலி ஆட்டம், நடன-இசை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

பின்னர் மாணவிகளுக்கு பொங்கல் வைத்தல் போட்டி நடந்தது. இதில் மாணவிகள் எல்லோரும் ஒன்று கூடி பொங்கல் வைத்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் துறை துணைத்தலைவர்கள் மாமலை வாசகர், காந்தி பாபு ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.

Next Story