அரசு பஸ்-2 கார்கள் கவிழ்ந்து விபத்து; 5 பயணிகள் படுகாயம்


அரசு பஸ்-2 கார்கள் கவிழ்ந்து விபத்து; 5 பயணிகள் படுகாயம்
x
தினத்தந்தி 16 Jan 2017 4:15 AM IST (Updated: 16 Jan 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

அடுத்தடுத்து மோதிக் கொண்டதில் அரசு பஸ் மற்றும் 2 கார்கள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

செம்பட்டு,

கார் மீது பஸ் மோதியது

சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு நேற்று முன்தினம் அதிகாலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. பஸ்சை டிரைவர் ஜெயக்குமார் ஓட்டி சென்றார். இந்த பஸ் திருச்சி- மதுரை சாலையில் மன்னார்புரம் ராணுவ முகாம் அருகே வந்தபோது, முன்னால் சென்ற கார் மீது திடீரென மோதியது. இதில் கார் கவிழ்ந்தது. உடனே பஸ் டிரைவர் ஜெயக்குமார் பிரேக் போட்டார். அப்போது பஸ்சும் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. அந்தசமயம் பின்னால் வந்த மற்றொரு காரும் பஸ்சின் மீது மோதி கவிழ்ந்தது.

பயணிகள் படுகாயம்

அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கொண்டு கவிழ்ந்ததில் அதில் வந்த பயணிகள் 5 பேர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தை கண்ட அந்த பகுதியினர் ஓடி சென்று வாகனங்களில் படுகாயத்துடன் கிடந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த தெற்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

போக்குவரத்து பாதிப்பு

பஸ் மற்றும் கார்கள் கவிழ்ந்ததால் திருச்சி-மதுரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே வாகனங்கள் எடமலைப்பட்டிபுதூர், கிராப்பட்டி வழியாக திருப்பி விடப்பட்டன. அதன்பிறகு கிரேன் உதவியுடன் சாலையில் கவிழ்ந்து கிடந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இந்த சம்பவம் குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story