கரூர் மாவட்டத்தில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்


கரூர் மாவட்டத்தில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 16 Jan 2017 4:00 AM IST (Updated: 16 Jan 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது.

கரூர்,

பொங்கல் விழா

தமிழர் திருநாளாம் பொங்கல்பண்டிகை நேற்று முன்தினம் கரூர் மாவட்ட பகுதிகளில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதன்படி ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் காலையில் மண்பானையில் பொங்கலிட்டு, கரும்பு, பழம் ஆகியவை வைத்து சாமி கும்பிட்டனர். பின்னர் நண்பர்கள், உறவினர்களுக்கு பொங்கல் வழங்கி கொண்டாடினர். இதைத்தொடர்ந்து பொங்கல் விழாவின் 2-ம் நாளான நேற்று மாட்டுப்பொங்கல் கிராமப்பகுதியில் கொண்டாடப்பட்டது. அதன்படி விவசாயிகள் தங்கள் வீடுகளில் உள்ள மாடுகளை மதியம் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு பெயிண்ட் அடித்து, மாலையில் வீடுகளில் பொங்கல் வைத்து சாமி கும்பிட்டனர். பின்னர் மாடுகளுக்கு பொங்கல், பழம் ஆகியவற்றை கொடுத்தனர்.

சோகத்தில் உள்ளனர்

ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மாட்டுப்பொங்கல் வெகு விமரிசையாக கொண்டாடப்படவில்லை. அதற்கு காரணம் மழை இல்லை. மழை இல்லாததால் விவசாயிகள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

இது குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:-

கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆகிய 2 ஆறுகள் உள்ளன. இந்த ஆண்டு மழை இல்லாததால் அமராவதி ஆற்றில் சுத்தமாக தண்ணீர் இன்றி வறட்சியாக காணப்படுகிறது. வறண்ட காவிரி ஆற்றில் நடுப்பகுதியில் கால்வாய் போன்று தண்ணீர் ஓடுகிறது. கடந்த காலங்களில் மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளை காவிரி, அமராவதி ஆற்றின் கரையோரம் அழைத்து சென்று குளிப்பாட்டி அங்கேயே கொம்புகளுக்கு சாயம் பூசி ஓட்டி வந்து பொங்கல் பண்டிகை கொண்டாடுவோம்.

தண்ணீர் இல்லை

மேலும் ஆறுகளுக்கு வெகு தூரம் செல்லும் நிலையில் உள்ள விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களின் அருகே உள்ள வாய்க்கால் தண்ணீரில் மாடுகளை குளிப்பாட்டுவார்கள்.

ஆனால் ஆறு, வாய்க்கால் என எங்கும் தண்ணீர் இல்லாததால் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து மாடுகளை குளிப்பாட்டினோம். எனவே விவசாயிகள் இந்த ஆண்டு மிகவும் சிரமத்தில் உள்ளோம். சிரமத்திலும் வருடத்திற்கு ஒருமுறை வரும் மாட்டுப்பொங்கலை விமரிசையாக இல்லாமல் முடிந்தவரை கொண்டாடி உள்ளோம் என்றார்.

அதேபோன்று ஆடுகள் வைத்து இருப்பவர்கள் காலையிலேயே வெளி இடங்களுக்கு ஓட்டி சென்று மேய விட்டனர். பின்னர் ஒரு ஆழ் குழாய் முன்பு நிறுத்தி அவற்றின் மேல் தண்ணீர் ஊற்றி கழுவினர். பின்னர் வீட்டிற்கு அழைத்து வந்து அந்த ஆடுகளுக்கு பொங்கல், பழம் வழங்கி கொண்டாடினர்.

Next Story