காணும் பொங்கலை கொண்டாட பாபநாசத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்


காணும் பொங்கலை கொண்டாட பாபநாசத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 16 Jan 2017 4:30 AM IST (Updated: 16 Jan 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

காணும் பொங்கலை கொண்டாட பாபநாசத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

விக்கிரமசிங்கபுரம்,

காணும் பொங்கல்

பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கலையொட்டி மக்கள், தங்களது வீடுகளுக்கு வந்து இருக்கும் உறவினர்களுடன் சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்துடன் செல்வதும், அங்கு உணவு சமைத்து சாப்பிட்டு மகிழ்வதும் வழக்கம்.

இதேபோல் நேற்று நெல்லை மாவட்டம் பாபநாசம், தலையணை, அகஸ்தியர் அருவி, காரையாறு உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதுதவிர மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்கள், கோவில்கள், பொழுதுபோக்கு இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.

சுற்றுலா பயணிகள்

பாபநாசம் தலையணையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. தண்ணீர் குறைவாக இருந்தும் ஏராளமானவர்கள் குளித்து மகிழ்ந்தனர். இதேபோல் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் அகஸ்தியர் அருவியிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

பாபநாசம் வனப்பகுதியில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் உணவு சாப்பிட்டதுடன், மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடினர். இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால், பாபநாசம் அணையில் தண்ணீர் குறைவாக உள்ளது. இதனால் படகு போக்குவரத்து நடைபெறவில்லை. எனவே காரையாறு பகுதிக்கு குறைந்த அளவில் சுற்றுலா பயணிகள் சென்று வந்தனர்.

தீவிர சோதனை

பாபநாசம் வனப்பகுதிக்குள் செல்லும் சுற்றுலா பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு வாகனமும் அங்குலம், அங்குலமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதன்பிறகே அனுமதிக்கப்பட்டது. யாரேனும் மது கொண்டு செல்கிறார்களா என்றும் வனத்துறையினர் கண்காணித்தனர்.

வனத்துறையினர் அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. பொதுமக்கள் கூடிய அனைத்து இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு அதிக அளவில் இருந்தது.


Next Story