கிணற்றில் விழுந்து வாலிபர் பலி; 2 நண்பர்கள் படுகாயம்


கிணற்றில் விழுந்து வாலிபர் பலி; 2 நண்பர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 16 Jan 2017 4:30 AM IST (Updated: 16 Jan 2017 3:00 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி அருகே புறா வேட்டைக்கு சென்ற போது பம்பு செட் அறை இடிந்ததால், கிணற்றுக்குள் விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

ஆரல்வாய்மொழி,

அவருடன் சென்ற 2 நண்பர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

புறா வேட்டைக்கு சென்றனர்

ஆரல்வாய்மொழி அருகே கணேசபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன், கட்டிட தொழிலாளி. இவருடைய மகன் சுபாஷ் (வயது 17). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு, ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு ஒர்க்‌ஷாப்பில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுபாசும், அவரது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் கண்ணன் (17), செந்தில் மகன் அய்யப்பன் (18) மற்றும் 3 பேர் சேர்ந்து சுபாஷ்நகர் பகுதியில் விளையாட்டு போட்டிகளை பார்க்க சென்றனர்.

அப்போது, குமாரபுரம் ரோட்டில் ஒரு தனியார் தோட்டத்தில், பாழடைந்த கிணற்றின் கரையில் உள்ள பம்புசெட் அறையில் புறா கூடுகட்டி குஞ்சு பொரித்து இருப்பதாக தகவல் அறிந்தனர். உடனே, நண்பர்கள் 6 பேருக்கும் புறா குஞ்சுகளை பிடிக்க ஆர்வம் ஏற்பட்டது. உடனே, 6 பேரும் புறா வேட்டைக்காக குறிப்பிட்ட அந்த கிணற்றை தேடி சென்றனர்.

பம்பு செட் அறை இடிந்தது

அங்கு சுமார் 200 அடி ஆழமுள்ள கிணற்றில் 4 அடி மட்டும் தண்ணீர் இருந்தது. கிணற்றின் கரையில் பம்பு செட் அறை இருந்தது. பம்பு செட் அறையின் உள்ளே இருந்த புறா கூட்டை எடுப்பதற்காக சுபாஷ், கண்ணன், அய்யப்பன் ஆகிய 3 பேரும் உள்ளே சென்றனர். அவர்களுடன் சென்ற பிற நண்பர்கள் 3 பேர் வெளியே நின்று கொண்டிருந்தனர். இவர்கள் 3 பேரும் அறையின் உள்ளே சென்றதும், அறையின் தரைப்பகுதி இடிந்து கிணற்றுக்குள் விழுந்தது. இதனால் நண்பர்கள் மூன்று பேரும் கிணற்றுக்குள் விழுந்தனர்.

அந்த கிணற்றில் மேலிருந்து இருந்து சுமார் 40 அடி ஆழத்தில் மோட்டார் வைப்பதற்காக மண்திட்டு போன்ற அமைப்பு வைக்கப்பட்டிருந்தது. அந்த மண் திட்டில் சுபாஷ் போய் விழுந்தார். மற்ற இருவரும் மண் திட்டில் விழுந்த வேகத்தில் தூக்கி வீசப்பட்டு கிணற்று தண்ணீருக்குள் விழுந்தனர். அங்கு 4 அடி ஆழத்தில் தண்ணீர் கிடந்ததால், படுகாயத்துடன் தண்ணீரில் தத்தளித்தனர்.

பரிதாப சாவு

இதற்கிடையே மண் திட்டில் விழுந்த சுபாஷ் மீது, மேலிருந்து இடிந்த பம்பு செட் அறையின் காங்கிரீட் சுவர், கருங்கற்கள் விழுந்தன. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே சுபாஷ் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவத்தை கரையில் நின்று பார்த்து கொண்டிருந்த மற்ற 3 நண்பர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனே, ஊருக்குள் சென்று நடந்த சம்பவத்தை கூறினர். தகவல் அறிந்த பொதுமக்கள் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்து விட்டு சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

தீயணைப்பு படையினர் விரைந்தனர்

போலீஸ் இன்ஸ்பெக்டர் பென்சாம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரமூர்த்தி, குமரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும், மாவட்ட தீயணைப்புதுறை அலுவலர் கல்யாணகுமார் தலைமையில் நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய 2 தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

தொடர்ந்து, தீயணைப்பு நிலைய வீரர் சண்முகம் சுந்தரம் கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த கண்ணன், அய்யப்பன் ஆகிய இருவரையும் மீட்டு மேலே கொண்டு வந்தார். படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் தயார் நிலையில் நின்ற 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பின்னர், கிணற்றின் இடைப்பட்ட பகுதியில் மண் திட்டில் இறந்து கிடந்த சுபாஷின் உடலை மீட்கும் முயற்சி நடந்தது. தீயணைப்பு நிலைய வீரர் கார்த்திக் உள்ளே இறங்கி சுபாஷின் உடல் மீது கிடந்த இடிபாடுகளை அகற்றி, உடலை மீட்டு மேலே கொண்டு வந்தார். தொடர்ந்து ஆரல்வாய்மொழி போலீசார், பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பொங்கல் பண்டிகையையொட்டி நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story