புள்ளிமானை கடித்து கொன்ற சிறுத்தைப்புலி பொதுமக்கள் அச்சம்


புள்ளிமானை கடித்து கொன்ற சிறுத்தைப்புலி பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 16 Jan 2017 4:30 AM IST (Updated: 16 Jan 2017 3:26 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அருகே வாழைத்தோட்டத்தில் மேய்ந்த புள்ளிமானை கடித்து கொன்ற சிறுத்தைப்புலி பொதுமக்கள் அச்சம்

பவானிசாகர்,

பவானிசாகர் அருகே வனப்பகுதியையொட்டி அமைந்து உள்ள கிராமம் போக்கனாக்கரை. இந்த பகுதியில் கடந்த 22 நாட்களுக்கும் மேலாக சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளது. இதுவரை இந்த கிராமத்தை சேர்ந்த 5 ஆடுகளை சிறுத்தைப்புலி கடித்து கொன்று உள்ளது. இதைத்தொடர்ந்து சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறையினர் போக்கனாக்கரை கிராமத்தில் 2 இடங்களில் கூண்டுகள் அமைத்து அதில் ஆட்டுக்குட்டியை அடைத்து உள்ளனர். அதுமட்டுமின்றி 20–க்கும் மேற்பட்ட வனத்துறையினர் இரவு நேரங்களில் துப்பாக்கி ஏந்தியபடி ரோந்து சுற்றி வருகிறார்கள். ஆனால் கூண்டுக்குள் சிக்காமல் சிறுத்தைப்புலி வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது.

இந்த நிலையில் போக்கனாக்கரையை சேர்ந்த விவசாயியான மூர்த்தி என்பவர் நேற்று முன்தினம் காலை தன்னுடைய வாழைத்தோட்டத்துக்கு சென்றார். அப்போது அவருடைய தோட்டத்தில் புள்ளிமான் ஒன்று கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் காயங்களுடன் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த புள்ளிமானை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அந்த புள்ளிமானை சிறுத்தைப்புலி கடித்து கொன்று உள்ளதை உறுதி செய்தனர். மேலும் இறந்து கிடந்த புள்ளிமான் 3 வயது உடையது என வனத்துறையினர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து புள்ளிமான் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அந்த பகுதியிலேயே புதைக்கப்பட்டது. சிறுத்தைப்புலி நடமாட்டம் காரணமாக போக்கனாக்கரை கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Next Story