புதிய நிர்வாகிகள் பட்டியல் விவகாரத்தில் போர்க்கொடி தூக்கியுள்ள 24 பேருடன் எடியூரப்பா ஆலோசனை
பா.ஜனதாவில் போர்க்கொடி தூக்கியுள்ள 24 பேருடன் வருகிற 19–ந் தேதி மாநில தலைவர் எடியூரப்பா ஆலோசனை நடத்த உள்ளார்.
பெங்களூரு
புதிய நிர்வாகிகள் பட்டியல் விவகாரத்தில் பா.ஜனதாவில் போர்க்கொடி தூக்கியுள்ள 24 பேருடன் வருகிற 19–ந் தேதி மாநில தலைவர் எடியூரப்பா ஆலோசனை நடத்த உள்ளார்.
கருத்து வேறுபாடுபா.ஜனதா மூத்த தலைவரும், கர்நாடக மேல்–சபை எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்து வருபவர் ஈசுவரப்பா. இவர், சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பை தொடங்கியுள்ளார். இதற்கு அந்த கட்சியின் மாநில தலைவரான எடியூரப்பா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதன் காரணமாக எடியூரப்பாவுக்கும், ஈசுவரப்பாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பில் தொடர்ந்து நீடிப்பேன் என்று ஈசுவரப்பா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பெங்களூரு மாநகராட்சி முன்னாள் மேயரும், சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பின் பொதுச் செயலாளராகவும் இருந்த வெங்கடேசமூர்த்தியை பா.ஜனதாவில் இருந்து எடியூரப்பா இடைநீக்கம் செய்தார். வெங்கடேசமூர்த்தி, ஈசுவரப்பாவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால், அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் எடியூரப்பாவுக்கும், ஈசுவரப்பாவுக்கும் இடையிலான கருத்து வேறுபாடு முற்றியது.
24 பேர் போர்க்கொடிஇதற்கிடையில், முன்னாள் மந்திரியும், எம்.எல்.ஏ.வுமான விசுவேஸ்வர ஹெக்டே உள்பட பா.ஜனதாவை சேர்ந்த 24 பேர் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதி அனுப்பி வைத்திருந்தார்கள். அதில், நீங்கள் (எடியூரப்பா) மாநில தலைவராக பொறுப்பு ஏற்ற பின்பு ஒரு தலைபட்சமாக செயல்படுகிறீர்கள். பல்வேறு அணிகளின் நிர்வாகிகளை நியமிப்பதற்கு முன் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவாதிக்கவில்லை. புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு பின்பு மாவட்டங்களில் 2 கோஷ்டிகள் உருவாகி உள்ளன. அதனால் புதிய நிர்வாகிகள் நியமன பட்டியலை மறுபரிசீலனை செய்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று எழுதி இருந்தார்கள்.
புதிய நிர்வாகிகள் விவகாரத்தில் எம்.எல்.ஏ. உள்பட 24 பேர் எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சம்பவம் பா.ஜனதா கட்சியினர் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
19–ந் தேதி ஆலோசனைஇந்த நிலையில், போர்க்கொடி தூக்கியுள்ள 24 பேரையும் சமாதானப்படுத்த எடியூரப்பா திட்டமிட்டுள்ளார். இந்த பிரச்சினையை தீர்க்க போர்க்கொடி தூக்கியுள்ள 24 பேரையும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தவும், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் எடியூரப்பா முடிவு செய்துள்ளார். இதற்காக வருகிற 19–ந் தேதி அந்த 24 பேரையும் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்து எடியூரப்பா ஆலோசனை நடத்த இருக்கிறார். அத்துடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி 24 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் எடியூரப்பா கருதுகிறார்.
அதே நேரத்தில் எடியூரப்பாவுக்கும், ஈசுவரப்பாவுக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டை போக்க, கர்நாடக மாநில ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். வருகிற 19–ந் தேதி போர்க்கொடி தூக்கியுள்ள 24 பேரை எடியூரப்பா சந்தித்து பேச இருப்பதால், அதற்கு முன்னதாக இன்று (திங்கட்கிழமை) எடியூரப்பா, ஈசுவரப்பாவை அழைத்து ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.