மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனா– பா.ஜனதா தனித்து போட்டியா? இன்று பேச்சுவார்த்தை


மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனா– பா.ஜனதா தனித்து போட்டியா? இன்று பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 16 Jan 2017 5:06 AM IST (Updated: 16 Jan 2017 5:06 AM IST)
t-max-icont-min-icon

மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனா– பா.ஜனதா தனித்து போட்டியிடுகிற சூழல் உருவாகி உள்ள நிலையில் இன்று கூட்டணி குறித்த பேச்சுவார்த்த.

மும்பை

மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனா– பா.ஜனதா தனித்து போட்டியிடுகிற சூழல் உருவாகி உள்ள நிலையில் இன்று கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இரு கட்சிகளுக்கும் இடையே தொடங்குகிறது.

உறவில் விரிசல்

மராட்டியத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ஜனதா– சிவசேனா கட்சியினர் தோழமையாக கழுத்தை கட்டிக்கொண்டு அலைந்தனர். இந்தநிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சிவசேனா– பா.ஜனதா உறவில் விரிசல் ஏற்பட்டது. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு இந்த கட்சிகள் கூட்டணி அமைத்த போதும் கீறியும், பாம்புமாகவே நடந்து கொள்கின்றன.

மத்தியில், மாநிலத்தில் ஆளும் பா.ஜனதா அரசை சிவசேனா விமர்சிப்பதும், மும்பை மாநகராட்சியை ஆளும் சிவசேனாவை அதன் கூட்டணியில் இருந்து கொண்டே பா.ஜனதா விமர்சிப்பதும் வாடிக்கையாகி விட்டது.

தனித்து போட்டியிட விருப்பம்

இந்த சூழ்நிலையில் மும்பை மாநகராட்சி உள்பட 10 மாநகராட்சிகளுக்கு வரும் பிப்ரவரி 21–ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் சிவசேனா, பா.ஜனதா ஆகிய 2 கட்சிகளின் தலைவர்களுமே தனித்து போட்டியிட விரும்புகின்றனர். தனித்து போட்டியிட்டால் நாங்கள் தான் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என 2 கட்சிகளும் மார்தட்டி வருகின்றன. இதுகுறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேக்கு நெருக்கமான தலைவர் ஒருவர் கூறும்போது:–

நாங்கள் நடத்திய ஆய்வு ஒன்றில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் மும்பை மாநகராட்சி தேர்தலில் 85 முதல் 90 வார்டுகளை பிடிப்போம். அதுவே தனித்து போட்டியிட்டால் 110–115 வார்டுகளை பிடிப்போம் என்பது தெரியவந்துள்ளது.

இதுபோன்ற சூழலில் தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைப்பது உகந்தது அல்ல. தனித்து போட்டியிட்டு தேர்தலுக்கு பிறகு பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து கொள்ளலாம். பா.ஜனதாவினர் 115 வார்டுகளை கேட்கிறார்கள். ஆனால் 75 சீட்டுக்கு மேல் ஒரு வார்டை கூட அவர்களுக்கு கொடுக்க முடியாது. பா.ஜனதா பிடிவாதமாக இருந்தால் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உருவாக சாத்தியமில்லை. உத்தவ்தாக்கரே வேட்பாளர்களை சிபாரிசு செய்ய மந்திரிகளுக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார். ஆனால் மந்திரி சிபாரிசு செய்யும் வேட்பாளர் வெற்றி பெறாவிட்டால், மந்திரி பதவியிழக்க நேரிடும். எனவே மந்திரிகளுக்கு இது வாழ்வா, சாவா பிரச்சினை.

இவ்வாறு அவர் கூறினார்

போஸ்டர்

இது ஒரு புறம் இருக்க பா.ஜனதாவினரும் தேர்தலை தனித்து சந்திக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். அவர்கள் தானே, புனேயில் மாநகராட்சி தேர்தல்களில் பா.ஜனதா தனித்து போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர். இதேப்போல மும்பை மாநகராட்சி தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்து சமூக வலைதளங்களில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு வருகின்றனர்.

இதேப்போல சமீபத்தில் பா.ஜனதா மாநிலத்தலைவர் ராவ்சாகேப் தன்வே மராட்டியத்தில் பா.ஜனதா பெரியண்ணனாக வளர்ந்துவிட்டது என கூறினார். இதையடுத்து மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனா, பா.ஜனதா தனித்து போட்டியிடுமா? அல்லது கடந்த சட்டமன்ற தேர்தலின்போது நடந்ததை போல தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமையுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று பேச்சுவார்த்தை

பரபரப்பான இந்த சூழ்நிலையில் தான் மாநகராட்சி தேர்தல் கூட்டணி குறித்து இன்று பா.ஜனதா– சிவசேனா இடையே பேச்சுவார்த்தை தொடங்குகிறது. இந்த பேச்சுவார்த்தையில் சிவசேனா சார்பில் அனில் தேசாய், அனில் பிரபாப், சுபாஷ் தேசாய் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

பா.ஜனதா சார்பில் ஆஷிஸ் செலார், வினோத் தாவ்டே, பிரகாஷ் மேத்தா ஆகியோர் பேச்சு வார்த்தையில் பங்கேற்கின்றனர்.


Next Story