மும்பை மாரத்தான் போட்டி மராட்டிய பெண்கள் சாதனை அரை மாரத்தானில் தமிழர் வெற்றி
மும்பை மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றி மராட்டிய பெண்கள் சாதனை படைத்தனர். அரை மாரத்தான் போட்டியில் தமிழ் வாலிபர் வெற்றி பெற்றார்.
மும்பை,
மும்பையில் ஆண்டுதோறும் ‘மும்பை மாரத்தான்’ போட்டி நடைபெற்று வருகிறது. நாட்டிலேயே மும்பை மாரத்தான் போட்டி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மும்பை மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. போட்டியை மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில், ஆண்களுக்கான சர்வதேச பிரிவில் தான்சானியா நாட்டை சேர்ந்த அல்போன்ஸ் சிம்பு முதல் இடத்தை பிடித்தார். அவர் போட்டி தூரத்தை 2 மணி 9 நிமிடம் 32 வினாடிகளில் கடந்தார்.
கென்யாவை சேர்ந்த ஜோஸ்வா கிர்கோரிர் 2 மணி 9 நிமிடம் 50 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்து 2–வது இடத்தையும், கென்யாவை சேர்ந்த எலிட் பார்ப்கெட்டுனி 3–வது இடத்தையும் பிடித்தனர்.
சர்வதேச அளவிலான பெண்களுக்கான போட்டியில் கென்யாவின் போர்னே கிட்டுர் முதலிடத்தையும், எத்தியோப்பியாவின் சால்து தபா 2–வது இடத்தையும், எத்தியோப்பியாவை சேர்ந்த டிஜிஸ்ட் கிர்மா 3–வது இடத்தையும் பிடித்தனர். மும்பை மாரத்தான் போட்டியில் தொடர்ந்து ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மராட்டிய பெண்கள் சாதனைஇந்தியர்களுக்கான ஆண்கள் பிரிவுகளுக்கான போட்டியில் ஒலிம்பிக் வீரர் கேதா ராம் 2 மணி 19 நிமிடம் 51 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்து முதல் இடத்தை பிடித்தார். 2 மணி 19 நிமிடம் 57 வினாடிகளில் வந்து பகதூர் சிங் 2–வது இடத்தை பிடித்தார். மணிப்பூரை சேர்ந்த சஞ்சித் லுவாங் 3–வது இடத்தை பிடித்தார்.
இந்திய பெண்களுக்கான போட்டியில் மராட்டியத்தை சேர்ந்த ஜோதி காவ்தே 2 மணி 50 நிமிடம் 53 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்து முதல் இடத்தை பிடித்தார். மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஷியாம்லி சிங் 2–வது இடத்தையும், ஜிக்மத் தோல்மா 3–வது இடத்தையும் பிடித்தனர்.
தமிழர் வெற்றி21 கி.மீ. அரை மாரத்தான் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ஜி.லெட்சுமணன் முதல் இடத்தை பிடித்தார். அவர் 1 மணி 5 நிமிடம் 5 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்தார். இதேப்போல் பெண்களுக்கான அரை மாரத்தான் ஓட்டத்தில் மராட்டியத்தின் மோனிகா அதாரே முதல் இடத்தை பிடித்தார்.
பல்வேறு பிரிவுகளின் கீழ் நடந்த மும்பை மாரத்தான் போட்டியில் பல தமிழர்கள் உள்பட 42 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர்.
முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ்முதல்– மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அவரது மனைவி அம்ருதா நேரில் வந்து போட்டியாளர்களை ஊக்குவித்தனர். இதேப்போல ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பிரபல நடிகர்களும், பிரமுகர்களும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.
போட்டிகளில் கலந்துகொண்டவர்களில் சுமார் 2 ஆயிரத்து 500 பேருக்கு தசைப்பிடிப்பு, உடல்சோர்வு மற்றும் நீர்போக்கு உள்ளிட்ட பிரச்சினை ஏற்பட்டது. அவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவ முகாம்களில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், 11 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.