சித்தூர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நடந்த விபத்துகளில் 2 பேர் பலி 7 பேர் படுகாயம்


சித்தூர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நடந்த விபத்துகளில் 2 பேர் பலி 7 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 17 Jan 2017 4:15 AM IST (Updated: 16 Jan 2017 9:45 PM IST)
t-max-icont-min-icon

சித்தூர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நடந்த விபத்துகளில் 2 பேர் பலி

ஸ்ரீகாளஹஸ்தி,

தந்தை கண் எதிரே மகன் பலி

வி.கோட்டா மண்டலம் மோட்லப்பள்ளியைச் சேர்ந்தவர் விஸ்வநாதகவுடு. இவருடைய மகன் லவக்குமார் (வயது 14). தந்தையும், மகனும் ஒரு மோட்டார் சைக்கிளில் நக்கனப்பள்ளிக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து திரும்பி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.

கிருஷ்ணாபுரம் அருகே வரும்போது பலமநேர்–வி.கோட்டா நெடுஞ்சாலையில் பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு லாரி, அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தந்தையின் கண் எதிரே லவக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். விஸ்வநாதகவுடு படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து வி.கோட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆட்டோ–கார் மோதல்

அதேபோல், ஸ்ரீகாளஹஸ்தி பகதூர்பேட்டையைச் சேர்ந்தவர் சரத் (45), ஆட்டோ டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு ஸ்ரீகாளஹஸ்தி பஸ் நிலையத்தில் இருந்து ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நாயுடுபேட்டையை நோக்கி சென்று கொண்டிருந்தார். பீமவரம் அருகே சென்றபோது, அந்த வழியாக எதிரே வந்த ஒரு கார், ஆட்டோ மீது மோதியது.

இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் சரத், ஆட்டோவில் பயணம் செய்த தொட்டம்பேடு முத்தியாலம்மா (26), திலீப் (30), பென்சுலம்மா (20), பென்சுலய்யா (23), ஏர்ப்பேடு மண்டலம் குபாகாவைச் சேர்ந்த நரேந்திரகுமார் (23), சில்லக்கூர் வத்திபாளையத்தைச் சேர்ந்த மாதவி (40), நின்றாவைச் சேர்ந்த வெங்கடேஷ் (35) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீகாளஹஸ்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதில் சரத், முத்தியாலம்மா, மாதவி, பென்சுலய்யா, வெங்கடேஷ் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருப்பதி ருயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொண்டு செல்லும் வழியிலேயே வெங்கடேஷ் பரிதாபமாக செத்தார்.

இந்த விபத்து குறித்து ஸ்ரீகாளஹஸ்தி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கண்ட இரு இடங்களில் நடந்த விபத்துகளில் 2 பேர் பலியானார்கள். மொத்தம் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.


Next Story