கட்சியை வழிநடத்துவது குறித்த திவாகரனின் பேச்சு


கட்சியை வழிநடத்துவது குறித்த திவாகரனின் பேச்சு
x
தினத்தந்தி 17 Jan 2017 5:00 AM IST (Updated: 16 Jan 2017 10:23 PM IST)
t-max-icont-min-icon

கட்சியை வழிநடத்துவது குறித்த திவாகரனின் பேச்சு அ.தி.மு.க. தலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்

காவேரிப்பட்டணம்,

திவாகரன் பேச்சு

தமிழக முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அ.தி.மு.க. ஆரம்ப கால தொண்டனான நான், கல்லூரி நாட்களில் இருந்து இன்று வரை ஏற்றுக் கொண்ட தலைமைக்கு விசுவாசமாகவும், உண்மையாகவும் என்னை ஈடுபடுத்தி கொண்டு செயலாற்றி வருகிறேன். தஞ்சாவூரில் நடராஜன் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் திருவிழா நிகழ்ச்சியில் அவருடைய மைத்துனர் திவாகரன் பேசியுள்ளார். அவர் பேசிய பேச்சு ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டனையும், கட்சி நிர்வாகிகளின் உணர்வுகளையும் காயப்படுத்தி உள்ளது. அதற்காக நிச்சயமாக அவர் ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டனிடமும் வருத்தம் தெரிவித்தே ஆக வேண்டும்.

முதலில் ஒரு கருத்தை சொன்னார். அ.தி.மு.க. உருவாக்கப்பட்ட பிறகு முதல் முறையாக திண்டுக்கல்லில் நடந்த இடைத்தேர்தலை நாங்கள் தான் நடத்தினோம் என சொல்லி இருக்கிறார். அப்போது அவருக்கு என்ன வயது இருக்கும் என்பதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள். இவருக்கும், அந்த தேர்தலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

நாங்கள் தொண்டர்களாக இருந்து அந்த தேர்தலில் பணியாற்றி உள்ளோம். அந்த வெற்றி முழுவதும் எம்.ஜி.ஆரின் புகழுக்கு கிடைத்த வெற்றி. அந்த வெற்றியை ஒரு சாதாரண நபர், எந்த வகையிலும் இந்த இயக்கத்திற்கு ஒரு துரும்பு அளவு கூட இணைத்து கொள்ளாத நபர், இந்த இயக்கத்தையே நாங்கள் வழி நடத்தினோம் என்று சொல்லி இருக்கிறார். இதற்காக எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

வன்மையாக கண்டிக்கிறேன்

அதே போல கழகம் இரண்டுபட்ட நேரத்தில் இந்த கட்சியை இணைத்தவர் எனது மாமா நடராஜன் என்று சொல்லி இருக்கிறார். அவர் அப்போது எங்கு, என்ன நிலையில் இருந்தார் என்பது இந்த நாட்டிற்கு தெரியாதா? அதில் நானும் பங்கு பெற்றிருக்கிறேன் என்று சொல்கிறார். கட்சி 2–ஆக உடைந்த போது எம்.ஜி.ஆரின் துணைவியார் மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜானகி அம்மையார் அவராக, ஜெயலலிதாவிடம் இந்த இயக்கத்திற்கு தலைமை ஏற்றுக் கொள்ளுங்கள் என சொல்லி, உடைந்த இயக்கத்தை இணைப்பதற்காக இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்காக கையெழுத்திட்டு தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தார்.

ஏதோ, இவர்கள் குடும்பம் தான் மாமா, மச்சான் தான் இந்த சின்னத்தை பெற்று தந்ததாக எவ்வளவு பெரிய தவறான தகவலை சொல்கிறார்கள். அதற்கு திவாகரன் காரணம் சொல்கிறார். இன்றைய இளைஞர்களுக்கு தெரியாது அதனால் தான் சொல்கிறேன் என்கிறார்.

இந்த வரலாற்று உண்மையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டவர்கள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தங்களின் குருதியை சிந்தியவர்கள், நூற்றுக்கணக்கான தொண்டர்கள் தங்களின் இன்னுயிரை நீத்து கொண்டவர்கள். இவர்கள் உழைத்த உழைப்பை இவர்கள் பெற்ற தியாகத்தை இந்த இருவர் (திவாகரன், நடராஜன்) பெற வேண்டும் என்று எவ்வளவு கயமைத்தனமாக கருத்தை திவாகரன் சொல்லி இருக்கிறார். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

ஓ.பன்னீர் செல்வம் சிறப்பான ஆட்சி

அ.தி.மு.க. ஒரு மக்கள் இயக்கம். எம்.ஜி.ஆர். இதை தொடங்கும் போது ஒரு தொண்டன் ஆரம்பித்த கட்சியில் நான் இணைகிறேன் என்று சொன்னார். எந்த வரலாற்றிலும் இது இருக்காது. பி.எச்.பாண்டியன் போன்றவர்கள் எல்லாம் அந்த நேரத்தில் கடுமையாக உழைத்தவர்கள். ஆனால் இவர் (திவாகரன்) தற்போது அந்த இயக்கத்திற்கு உரிமை கொண்டாடுகிறார். இன்றைய தலைமைக்கழகம் ஜானகி அம்மையாரின் சொந்த சொத்து. அதை இயக்கத்திற்காக கொடுத்துள்ளார். கட்சியிலேயே இல்லாத நபர் (திவாகரன்), கட்சிக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. தன்னை அ.தி.மு.க.வில் நிலை நிறுத்தி கொள்வதற்காக அதிகார மையம் ஒன்றை உருவாக்கி கொண்டு அதில் கோலோச்சுவதற்காக இப்படிப்பட்ட ஒரு தவறான தகவலை கொடுத்து தொண்டர்களை ஏமாற்ற நினைக்கிறார்.

இது முற்றிலும் தவறான செயல். தயவு செய்து இனிமேல் இதுபோன்ற கருத்துக்களை சொல்லக்கூடாது. இன்று முதல்–அமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர் செல்வத்திடம் ஜெயலலிதா பொறுப்பை ஒப்படைத்தார். அடக்கத்துடன் ஆட்சி செய்தார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை இன்று பயன்படுத்தி கொண்டு மக்கள் எளிதில் அணுக கூடிய முதல்–அமைச்சராக மாறி இருக்கிறார். அதற்கு உதாரணம் வார்தா புயல். அப்போது சக அமைச்சர்களுடன், அதிகாரிகளுடன் இணைந்து அந்த புயலின் தாக்கத்தை விரைவில் தூக்கி எறிந்து மக்களை சகஜ வாழக்கைக்கு கொண்டு வந்திருக்கிறார்.

அதே போல சென்னையில் குடிநீர் பிரச்சினை வருகிறது என்பதை அறிந்த உடனே, எந்த வித ஈகோவும் பார்க்காமல் ஆந்திர முதல்–மந்திரியிடம் நேரடியாக சென்று தண்ணீர் வேண்டும் என கேட்டார். அதன்படி கூடுதலாக 2.5 டி.எம்.சி. தண்ணீர் வழங்க உத்தரவு பிறப்பித்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அதிகார மையம்

இவ்வாறு எளிமையான நடைமுறையை கொண்டுள்ள ஒரு முதல்–அமைச்சர் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். இவருக்கு ஏதாவது தொல்லை கொடுக்க வேண்டும் என்று இவர் (திவாகரன்) கருதுகிறார். இது தேவையில்லாத ஒன்று. இவரது பேச்சு இன்று பொறுப்பேற்றுள்ள கழக பொதுச்செயலாளருக்கு மிகப்பெரிய தர்ம சங்கடத்தை உருவாக்க கூடிய சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.

அவருக்கு இவர்கள் மிகப்பெரிய நிர்பந்தத்தை கொடுத்து இருக்கிறார்கள். அதிகார மையம் ஒருவரிடம் தான் இருக்க வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். ஆனால் இந்த அதிகார மையம் ஏற்கனவே உள்ள மற்ற கட்சிகளை போல குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்குமே இருக்க வேண்டும் என்று அவர்கள் (திவாகரன், நடராஜன்) தங்களை தயார்படுத்தி கொள்கிறார்கள். இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். இன்னொன்றும் சொல்லி இருக்கிறார்கள். என்ன தியாகம் செய்து விட்டீர்கள். நீங்கள் முதலில் இந்த கட்சியிலேயே இல்லை. ஜெயலலிதா ஏற்கனவே உங்களை கட்சியில் இருந்து வெளியேற்றி இருக்கிறார். கட்சியிலேயே இல்லாத ஒரு நபர் இன்று இந்த இயக்கத்தை காப்பாற்றுவேன் என்று ஒரு அதிகார மையத்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறார்.

வருத்தம் தெரிவிக்க வேண்டும்

நான் ஒரு அ.தி.மு.க. தொண்டன் என்ற நிலையில் இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கூறி கொள்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்தல்ல. என்னை போன்ற லட்சக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்களின் கருத்து. திவாகரன் தான் பேசிய பேச்சுக்காக ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டனிடமும் தனது வருத்தத்தை தெரிவித்து கொள்ள வேண்டும். இனிமேல் இது போன்ற அடாவடித்தனமாக பேச்சை பேசி அ.தி.மு.க. தொண்டர்களை பயமுறுத்துவதாகவோ, அல்லது அ.தி.மு.க. தொண்டர்களை தன் வசம் இழுப்பதற்காக வேறுவிதமான நடவடிக்கையிலோ ஈடுபடக்கூடாது. இது ஒரு தொண்டனின் எச்சரிக்கையாக கூறுகிறேன்.

இரட்டை இலை சின்னம் கிடைத்தவுடன் மருங்காபுரி, மதுரை கிழக்கு ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. தற்போது திவாகரன் அது பற்றி கூறியிருக்கிறார். அந்த தேர்தலை முன்னின்று நடத்தியவர் நடராஜன் என்று கூறியிருக்கிறார். இப்படி ஒரு தவறான கருத்தை சொல்லும் போது வேதனையாக உள்ளது. இந்த தேர்தலில் நானும் பங்கு பெற்றவன். மதுரை கிழக்கு தேர்தலின் போது அந்த தொகுதி பொறுப்பாளராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எனக்கு 10 வாக்குச்சாவடிகளுக்கான பொறுப்பை கொடுத்தார். நானும் அந்த தேர்தலை சந்தித்தேன்.

அந்த தேர்தல் வெற்றி கே.கே.எஸ்.எஸ்.ஆர். தலைமையில் பணியாற்றிய அமைப்பாக இருந்தாலும், எம்.ஜி.ஆர். ஆசி பெற்றவர் என்ற காரணத்திற்காக மக்கள் அந்த வெற்றியை தந்தனர். இதில் நடராஜன் எங்கே இருந்து வருகிறார். திவாகரன் யாரை ஏமாற்றுகிறார். அவர்கள் 2 பேரும் இந்த இயக்கத்தை அவர்கள் வீட்டு சொத்தை போல மாற்ற முயற்சி செய்கிறார்கள்.

அனுமதிக்க மாட்டோம்

தயவு செய்து இது போன்ற கற்பனை எண்ணத்தில் அவர்கள் வலம் வரக்கூடாது. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, 1½ கோடி தொண்டர்களை கொண்ட அ.தி.மு.க. என்ற இந்த இயக்கம் எந்த விதத்திலும் கலகலத்து விடக்கூடாது. மாசு பட்டு விடக்கூடாது. பல்வேறு வருத்தங்கள், சோகங்கள் இருந்தாலும் எங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டு யார் தலைமை பொறுப்பு ஏற்றாலும் அவர்களை தலைவராக ஏற்றுக்கொண்டு பணியாற்றி வருகிறோம்.

அதற்காக இவர்களை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக தவறான கருத்துக்களை சொல்லி எல்லோரையும் சங்கடத்தில் ஆழ்த்துவதை அனுமதிக்க மாட்டோம். குறிப்பாக இன்றைய பொதுச்செயலாளரை அவர்கள் சங்கடத்தில் ஆழ்த்தி கொண்டிருக்கிறார்கள். அதை அவர்கள் தவிர்க்க வேண்டும். அதை தவிர்ப்பதற்கு உரிய சூழலை இன்றைய பொதுச்செயலாளர் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story