பள்ளிபாளையத்தில், தண்டவாளத்தில் கல்லை வைத்து சேலம் ரெயிலை கவிழ்க்க முயன்ற வழக்கில் 5 பேர் கைது


பள்ளிபாளையத்தில், தண்டவாளத்தில் கல்லை வைத்து சேலம் ரெயிலை கவிழ்க்க முயன்ற வழக்கில் 5 பேர் கைது
x
தினத்தந்தி 17 Jan 2017 4:15 AM IST (Updated: 16 Jan 2017 10:27 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையத்தில் தண்டவாளத்தில் கல்லை வைத்து சேலம் ரெயிலை கவிழ்க்க முயன்ற வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பள்ளிபாளையம்,

தண்டவாளத்தில் மைல்கல்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் எஸ்.பி.பி.காலனி பகுதியில் ரெயில்வே தண்டவாளம் செல்கிறது. இந்த வழியாக கடந்த 13–ந் தேதி இரவு சேலத்தில் இருந்து ஈரோடு செல்லும் பயணிகள் ரெயில் சென்று கொண்டு இருந்தது.

அப்போது என்ஜின் முன்பகுதியில் டமார் என்ற சத்தம் கேட்டது. இதையடுத்து என்ஜின் டிரைவர் அனீஸ்குமார் ரெயிலை நிறுத்தி கீழே இறங்கி சென்று பார்த்தார். அப்போது தண்டவாளத்தின் அருகில் நட்டு இருந்த மைல்கல்லை யாரோ பிடுங்கி தண்டவாளத்தின் மேல் வைத்துள்ளதும், ரெயில் என்ஜின் அந்த கல் மீது மோதி பலத்த சத்தம் கேட்டதும் தெரியவந்தது.

ரெயிலை கவிழ்க்க சதி

இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

மேலும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவின் பேரில் இந்த வழக்கில் துப்புத்துலக்க திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர்அசோக்குமார், எலச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் சப்–இன்ஸ்பெக்டர்கள் ராஜா, சுரேஷ், ரவி ஆகியோரை கொண்டு 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இவர்கள் தண்டவாளத்தில் மைல்கல் வைத்து ரெயிலை கவிழ்க்க முயன்றவர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

கைது

இதில் மதுரையை சேர்ந்தவரும், பள்ளிபாளையத்தில் பள்ளம் என்ற இடத்தில் வசித்து வருபவருமான கட்டிட தொழிலாளியான ரஞ்சித்(வயது25), பள்ளிபாளையம் அடுத்த ஆலாம்பாளையத்தை சேர்ந்த ஏ.சி.எந்திரம் மெக்கானிக் குட்டி என்ற செந்தில்(22), தாஜ்நகரை சேர்ந்த வெல்டரான சந்தானம்(23), ஆயக்காட்டூரை சேர்ந்த சுப்பிரமணி(24), வேன் டிரைவர் மணி(25) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் செந்தில், சந்தானம், சுப்பிரமணி, மணி ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதில் ரெயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் மைல்கல்லை வைத்து சதித்திட்டம் தீட்டியதற்கு மூளையாக ரஞ்சித் செயல்பட்டதும், அதற்கு மற்ற 4 பேரும் உடந்தையாக இருந்ததும், போலீசார் தேடுவதை அறிந்ததும் ரஞ்சித் மதுரைக்கு தப்பி சென்றதும் தெரியவந்தது. அதையொட்டி போலீசார் மதுரைக்கு விரைந்து சென்று ரஞ்சித்தை பிடித்தனர்.

இவர்கள் போலீசாரிடம், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி தண்டவாளத்தில் மைல்கல்லை வைத்து ரெயிலை கவிழ்க்க முயன்றதாக கூறி உள்ளனர். பின்னர் பள்ளிபாளையம் போலீசார் பிடிபட்ட ரஞ்சித், செந்தில், சந்தானம், சுப்பிரமணி, மணி ஆகிய 5 பேரையும் ஈரோடு ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர். அவர்களை ஈரோடு ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.


Next Story