பொங்கல் விடுமுறை முடிந்தது: சேலம் வழியாக சென்ற ரெயில்களில் பயணிகள் கூட்டம்


பொங்கல் விடுமுறை முடிந்தது: சேலம் வழியாக சென்ற ரெயில்களில் பயணிகள் கூட்டம்
x
தினத்தந்தி 17 Jan 2017 4:15 AM IST (Updated: 17 Jan 2017 12:02 AM IST)
t-max-icont-min-icon

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை கடந்த 3 நாட்கள் கொண்டாடப்பட்டது.

சூரமங்கலம்,

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை கடந்த 3 நாட்கள் கொண்டாடப்பட்டது. இப்பண்டிகையை கொண்டாட நகர பகுதியில் வசிக்கும் மக்கள், தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டாலும், கடந்த 13, 14, 15–ந் தேதிகளில் மக்கள் கூட்டம் அதிகளவு இருந்தது. மேலும், சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டன.

இந்தநிலையில், பொங்கல் விடுமுறை நேற்றுடன் முடிவடைந்ததால் சொந்த ஊர்களுக்கு திரும்பியவர்கள், தாங்கள் வசிக்கும் நகர பகுதிகளுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை பகுதியில் இருந்து சென்னை வரும் ரெயில்களிலும், கேரள மாநிலம் திருவனந்தபுரம், எர்ணாகுளம், பாலக்காடு பகுதிகளில் இருந்து சென்னை செல்லும் ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

குறிப்பாக சென்னை வரும் அனைத்து ரெயில்களிலும் பயணிகளின் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது. முன்பதிவில்லா பெட்டிகளில் நிற்ககூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று சேலம் மார்க்கம் வழியே சென்ற திருவனந்தபுரம்–சென்னை எக்ஸ்பிரஸ், மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ், கோவை–சென்னை எக்ஸ்பிரஸ், சேரன், ஏற்காடு, பழனி எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்–பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட அனைத்து ரெயில்களிலும் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் சேலம் ஜங்‌ஷன் ரெயில் நிலையம் நேற்று பயணிகளின் கூட்டத்தால் அலைமோதியது. பொங்கல் பண்டிகைக்காக இன்று (செவ்வாய்கிழமை) வரை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதேபோல் பஸ்களிலும் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இருப்பினும், கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் பயணிகள் தாங்கள் பணிபுரியும் நகரங்களுக்கு பஸ்சில் புறப்பட்டு செல்கின்றனர்.


Next Story