காணும் பொங்கலையொட்டி சேலத்தில் இறைச்சி–மீன் கடைகளில் அலைமோதிய கூட்டம்
காணும் பொங்கலையொட்டி சேலத்தில் இறைச்சி–மீன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.
சேலம்,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தொடர்ந்து 3 நாட்கள் கொண்டாடப்பட்டது. 3–வது நாளான நேற்று காணும் பொங்கலாகவும், கரிநாளாகவும் கடைபிடிக்கப்பட்டது. அதையொட்டி இந்துக்கள் மட்டுமின்றி அனைவரின் வீடுகளிலும் அசைவ உணவு சமைத்து குடும்பத்துடன் உண்டு மகிழ்ந்தனர். காணும் பொங்கலையொட்டி சேலத்தில் உள்ள இறைச்சி கடைகளிலும் வழக்கத்தைவிட கூட்டம் அலைமோதியது. இதனால் கறியின் விலையும் எகிறியது. ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூ.430 முதல் ரூ.460 வரையிலும், கறிக்கோழி ரூ.150 முதல் ரூ.180 வரையிலும், நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூ.360 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் இறைச்சி கடைகளில் வியாபாரம் மும்முரமான நடைபெற்றது.
இதேபோல், அம்மாபேட்டை, வின்சென்ட், அஸ்தம்பட்டி, சூரமங்கலம், செவ்வாய்பேட்டை, தாதகாப்பட்டி பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மீன் விலை உயர்வுஇதேபோல், வஜ்ரம் மீன் ஒரு கிலோ ரூ.450–க்கும், கட்லா மீன் ரூ.140–க்கும், ரோகு மீன் ரூ.130–க்கும், வெலமீன் ரூ.300–க்கும், ஆற்று கெளுத்தி மீன் ரூ.120–க்கும் விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் விலையை பொருட்படுத்தாமல் ஒருசில அசைவ பிரியர்கள் மீன்களையும், கறிகளையும் தங்களது வீடுகளுக்கு வாங்கி சென்றதையும் காணமுடிந்தது.
பெரும்பாலான இறைச்சிக்கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அசைவ பிரியர்கள் கடைகளில் காத்திருந்து கறிகளை வாங்கி சென்றனர். காணும் பொங்கலையொட்டி இறைச்சி மற்றும் மீன் வியாபாரம் அமோகமாக நடந்ததால் கறிக்கடை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கறிக்கடை வியாபாரிகள் கூறுகையில், ‘‘ஆண்டுதோறும் காணும்பொங்கல் அன்று கறிக்கடைகளில் வியாபாரம் அதிகளவில் இருக்கும். அந்த வகையில் இந்தாண்டு வியாபாரம் நன்றாக நடந்தது. சேலம் மாநகரில் மட்டும் ஒரே நாளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யப்பட்டிருக்கும். அதேபோல், ஒரேநாளில் 30 டன் கோழி இறைச்சி விற்பனை செய்யப்பட்டுள்ளது‘‘ என்றனர்.