மோட்டார்சைக்கிளில் மான் இறைச்சி கடத்திய 2 பேர் கைது
பவானிசாகர் அருகே மோட்டார்சைக்கிளில் மான் இறைச்சி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். 5 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் உள்ள ரோட்டில் பவானிசாகர் வனச்சரகர் பெர்னாட் தலைமையில் வனத்துறையினர் நேற்று ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் 3 மோட்டார்சைக்கிள்கள் வந்து கொண்டிருந்தன. வனத்துறையினரை கண்டதும் 2 மோட்டார்சைக்கிள்களில் வந்த 5 பேர் அங்கிருந்து அங்கிருந்து தப்பி ஓடினர். ஒரு மோட்டார்சைக்கிளில் 2 பேரை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் மோட்டார்சைக்கிளில் வந்தவர்களிடம் இருந்த பையை சோதனையிட்டனர். அப்போது அதில் 2 புள்ளிமான் தலைகள், அதன் இறைச்சி 5 கிலோ மற்றும் 8 கால்கள் இருந்ததை கண்டு வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து அந்த 2 பேரையும் பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
சுருக்கு கண்ணிவிசாரணையில், ‘அவர்கள் பவானிசாகர் அருகே உள்ள ஒத்தப்பனை மரக்காடு பகுதியை சேர்ந்த சாமிநாதன் (வயது 30), மாறன் (55). கூலித்தொழிலாளிகள். இவர்களும், அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (32), ரங்கசாமி (40), பவானிசாகர் அருகே உள்ள குரும்பபாளையத்தை சேர்ந்த பேச்சியப்பன் (38), ராஜேந்திரன் (30), அண்ணாநகரை சேர்ந்த பிரகாஷ் (33) என மொத்தம் 7 பேரும் சேர்ந்து விளாமுண்டி வனப்பகுதிக்கு சென்று உள்ளனர். பின்னர் அவர்கள் வனப்பகுதியில் சுருக்கு கண்ணிகளை ஆங்காங்கே புதைத்து வைத்தனர்.
இந்த சுருக்கு கண்ணியில் 2 புள்ளிமான் வசமாக சிக்கி கொண்டன. உடனே அவர்கள் அனைவரும் தாங்கள் கொண்டு வந்த அரிவாளால் 2 புள்ளிமான்களையும் வெட்டி சிறிய, சிறிய துண்டுகள் கொண்ட இறைச்சியாக்கி அதை பங்கிட்டு கொண்டனர். இதில் புள்ளிமான்களின் 2 தலைகள், 8 கால்கள் மற்றும் 5 கிலோ இறைச்சியை சாமிநாதன் மற்றும் மாறனும், 5 பேரும் 15 கிலோ மான் இறைச்சியையும் பங்கிட்டு எடுத்து கொண்டனர். இதையடுத்து இவர்கள் 7 பேரும் மோட்டார்சைக்கிளில் ஏறி விளாமுண்டி பகுதியில் இருந்து மான் இறைச்சியை விற்பனைக்காக கடத்தி சென்றபோது வனத்துறையினரிடம் சிக்கிக்கொண்டது,’ தெரியவந்தது.
2 பேர் கைதுஇதைத்தொடர்ந்து 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 2 புள்ளிமான் தலைகள், 8 கால்கள், புள்ளிமான்களை வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள், சுருக்கு கண்ணிக்கும் பயன்படும் கம்பி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மோட்டார்சைக்கிளில் தப்பி ஓடிய சக்திவேல், ரங்கசாமி, பேச்சியப்பன், ராஜேந்திரன், பிரகாஷ் ஆகிய 5 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.