பவானிசாகரில் கொலை செய்யப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது; கணவர் கைது
பவானிசாகரில் கொலை செய்யப்பட்ட பெண் உடல் அடையாளம் தெரிந்ததுடன், அவரை கொன்ற கணவரையும் போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் போலீஸ் நிலையம் அருகே கால் முறிக்கப்பட்ட நிலையில் அலங்கோலமாக பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட பெண் யார்? என விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், ‘கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அருகே உள்ள எல்லக்கண்டியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியான பசுவண் (வயது 50) என்பவரின் மனைவி ஜெயா (45),’ என தெரியவந்தது.
தந்தையை பார்ப்பதற்காக...இந்த நிலையில் ஜெயாவை கொலை செய்ததாக அவருடைய கணவர் பசுவண், பவானிசாகர் கிராம நிர்வாக அதிகாரி கர்ணனிடம், சரண் அடைந்தார். உடனே அவரை பவானிசாகர் போலீசாரிடம் கிராம நிர்வாக அதிகாரி கர்ணன் ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ‘பசுவணின் பெற்றோர் பவானிசாகர் அருகே உள்ள தெங்குமரஹடா பகுதியில் வசித்து வருகிறார்கள். பசுவணின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் அவரை பார்ப்பதற்காக பசுவண், அவருடைய மனைவி ஜெயா ஆகியோர் கடந்த 14–ந் தேதி அன்று பவானிசாகர் வந்து உள்ளனர்.
கைதுபவானிசாகர் வந்ததும் பசுவண் அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்து உள்ளார். இதனால் பசுவணுக்கும், ஜெயாவுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது.
வாய்த்தகராறு முற்றியதில் பசுவன் ஆத்திரம் அடைந்து ஜெயாவின் காலை முறித்ததுடன், அங்கிருந்த கல்லை எடுத்து ஜெயாவின் தலையில் போட்டு கொலை செய்தது,’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பசுவணை போலீசார் கைது செய்தனர்.