தொடர் விடுமுறை : ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் அவதி
தொடர் விடுமுறை காரணமாக பொள்ளாச்சியில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் அவதிபட்டனர்.
மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8–ந்தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தது. இதையடுத்து பண தட்டுப்பாடு மற்றும் சில்லறை பிரச்சினை ஏற்பட்டது. இதனால் பொதுமக்களிடையே பணபுழக்கம் குறைந்தது. மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது ஏ.டி.எம். மையங்களில் ரூ.4500 வரை எடுத்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் 500, 100 ரூபாய் நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், ரூ.4 ஆயிரம் மட்டுமே எடுக்க முடிகிறது. அதுவும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு ஒரே தாளாக வருவதால், பொதுமக்கள் சில்லறை மாற்ற முடியாமல் அவதிபட்டு வருகிறார்கள்.
ஏ.டி.எம். சேவை முடங்கியதுஇந்த நிவையில் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 25–க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லை. பணம் இல்லாததால் பொள்ளாச்சி மகாலிங்கபுரம், புதிய திட்டச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து ஏ.டி.எம். மையங்களும் மூடி கிடக்கின்றன. இதனால் ஏ.டி.எம். சேவை முற்றிலும் முடங்கி விட்டது.
தொடர் விடுமுறையையொட்டி பொள்ளாச்சி பகுதிக்கு சுற்றுலா வந்தவர்கள் பணம் எடுக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். இதேபோன்று உள்ளூர் மக்களும் பண பிரச்சினை காரணமாக வெளியூர்களுக்கு செல்வதை தவிர்த்தனர். விடுமுறை நாட்களில் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும் பொள்ளாச்சி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பண்டிகை காலங்களில் பரபரப்பாக காணப்படும் கடை வீதியில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது.
பொதுமக்கள் அவதிஇதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:–
வழக்கமாக பண்டிகை காலங்களில் புத்தாடைகள், நகைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகளவு காணப்படும். ஆனால் இந்த ஆண்டு பணப்பிரச்சினை காரணமாக கடைகளில் பொதுமக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதனால் பெருமளவு வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பணம் தீர்ந்து விட்டதால் மூடிக்கிடக்கின்றன. இதனால் வெளியூர்களில் இருந்து சுற்றுலா வந்தவர்கள் பணத்தை எடுக்க முடியாமல் சிரமப்பட்டனர். மேலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வைத்து உள்ளவர்கள் சில்லறை வாங்க முடியாமல், கடைகளில் பொருட்களை வாங்காமல் திரும்பி சென்றனர். பண்டிகை காலங்களில் கூடுதலாக ஏ.டி.எம். மையங்களில் பணம் வைக்க வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.