கோவை அருகே மலைவாழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடிய போலீஸ் அதிகாரிகள்
கோவை மாவட்ட போலீஸ் துறை சார்பில் 18 கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்களுடன் போலீஸ் அதிகாரிகள் பொங்கல் கொண்டாடினார்கள்.
தமிழக– கேரள எல்லையில் கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் உள்ளது. இதனால் தமிழக எல்லையோரம் உள்ள கிராம மலைவாழ் மக்கள் மாவோயிஸ்டுகளின் வலையில் விழுந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளையும் கோவை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
அதன்படி கோவை மாவட்ட காவல் துறை, மாவட்ட வனத்துறை, அதிரடிப்படை, நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் சார்பில் கோவையை அடுத்த சாடிவயல் அருகே உள்ள சிங்கப்பதி மலை வாழ்மக்கள் ஆரம்ப பள்ளியில் காட்டுப்பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
18 கிராம மக்கள்விழாவிற்கு கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரம்யாபாரதி தலைமை தாங்கி பேசினார். விழாவில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பாரி கலந்து கொண்டு மலை வாழ் கிராம மக்களுக்கு போர்வை, ஆடைகள், டார்ச்லைட் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அதன்பின்னர் மலைவாழ் மக்களின் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கிராம பெண்கள் தனித்தனியாக அடுப்பு வைத்து பொங்கல் வைத்தனர். இதில் போலீஸ் ஐ.ஜி. பாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரம்யாபாரதி ஆகியோரும் கலந்து கொண்டு பொங்கலிட்டனர். இந்த பொங்கல் விழாவில் சாடி வயல், சர்க்கார்பதி, தாணிகண்டி உள்பட 18 கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள் 500 பேர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு போட்டிஅதைத்தொடர்ந்து கிராம சிறுவர்களுக்கு கால்பந்து, கைப்பந்து, ஓட்டப்பந்தயம் உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான சிறுவர்–சிறுமிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பாரி பரிசு வழங்கினார்.
இதில், கூடுதல் சூப்பிரண்டுகள் முத்தரசு, மோகன்நிவாஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி செய்திருந்தார்.