வறட்சி, குழாய் உடைப்பால் விருதுநகரில் குடிநீர் பிரச்சினை கடுமையாகும் நிலை


வறட்சி, குழாய் உடைப்பால் விருதுநகரில் குடிநீர் பிரச்சினை கடுமையாகும் நிலை
x
தினத்தந்தி 17 Jan 2017 1:12 AM IST (Updated: 17 Jan 2017 1:12 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் பிரச்சினை கடுமையாகி வரும் நிலை

விருதுநகர்,

குடிநீர் பிரச்சினை

விருதுநகர் நகராட்சி, பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கு ஆனைக்குட்டம் அணைப்பகுதி, கோடைக்கால குடிநீர் தேக்கம், காரிச்சேரி மற்றும் ஒண்டிப்புலி கல்குவாரிகள் மற்றும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகியவற்றை நம்பி உள்ளது. இதில் மழை இன்மை காரணமாக நிலத்தடி நீர் ஆதாரமான ஆனைக்குட்டம் அணைப்பகுதியில் உள்ள 13 உறைகிணறுகள், கோடைக்கால குடிநீர் தேக்கம், காரிச்சேரி கல்குவாரி ஆகியவை வறண்டு விட்டன.

கடுமையாகிறது...

நீர் ஆதாரங்களில் இருந்து 50 முதல் 55 லட்சம் லிட்டர் தண்ணீர் வரை கிடைத்ததால் 8 முதல் 10 நாட்கள் இடைவெளியில் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்து வந்தது. தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் அருப்புக்கோட்டை அருகே சுக்கிலநத்தம் கிராமத்தில் குடிநீர் பகிர்மான குழாய் உடைப்பால் தாமிரபரணியில் இருந்து தண்ணீர் வரத்து நின்று போனது. ஆனைக்குட்டம் மற்றும் காரிச்சேரி கல்குவாரியில் இருந்து தினசரி 18 முதல் 20 லட்சம் லிட்டர் தண்ணீரே கிடைத்து வருகிறது. இதனால் விருதுநகர் பகுதியில் குடிநீர் பிரச்சினை கடுமையாகி வருகிறது.

ஏன்?

விருதுநகருக்கான மற்றொரு குடிநீர் ஆதாரமான ஒண்டிப்புலி கல்குவாரியில் 80 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது. ஆனால் இந்த கல்குவாரியில் இருந்து நகருக்கு தண்ணீர் கொண்டு வரும் குழாய் நகரின் தெற்கே மூன்று வருடங்களுக்கு முன்னரே நான்கு வழிச்சாலை அமைப்பின் போது உடைந்து விட்டது. அதன் பின்னர் இந்த குழாயினை மாற்றுப் பாதை வழியாக கொண்டு வருவதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதால் நகராட்சி நிர்வாகம் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் உள்ள ரெயில்வே லெவல் கிராஸ் அருகில் தரைமட்ட நீர் தேக்க தொட்டி கட்டி அதில் இருந்து குடிநீர் எடுக்க முயற்சி மேற்கொண்டது. அப்போதும் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் நகராட்சி நிர்வாகம் ஒண்டிப்புலியில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை கைவிட்டு விட்டது. இதனால் தற்போது ஒண்டிப்புலி கல்குவாரியில் தண்ணீர் இருந்தும் நகர் மக்களுக்கு அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தேவை

தொடர்ந்து மழை இல்லாத நிலையில் விருதுநகர் பகுதியில் குடிநீர் பிரச்சினை மேலும் கடுமையாகும் நிலை ஏற்பட்டு வருகிறது. நகராட்சி நிர்வாகத்தால் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க தேவையான நிதி ஆதாரம் இல்லை. இதனால் மாவட்ட நிர்வாகம் விருதுநகரில் கடுமையாகி வரும் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து போர்க்கால அடிப்படையில் ஒண்டிப்புலி கல்குவாரியில் இருந்து தண்ணீர் கொண்டு வரவும், உடைப்பு ஏற்பட்டுள்ள தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் உள்ள குடிநீர் பகிர்மான குழாய்களை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இதுதவிர குடிநீர் வினியோகத்தின் இடைவெளி நாட்களை குறைக்க வினியோக மண்டலங்களை குடிநீர் வடிகால் வாரியம் பரிந்துரை செய்தது போல எண்ணிக்கையை குறைத்து வினியோகத்தையும் சீரமைக்க வேண்டியது அவசியம் ஆகும். இல்லையேல் நகரில் குடிநீர் பிரச்சினை சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதற்கு வழி வகுத்து விடும்.

Next Story