காணும் பொங்கலையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் குவிந்த பொதுமக்கள்


காணும் பொங்கலையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 17 Jan 2017 4:30 AM IST (Updated: 17 Jan 2017 1:22 AM IST)
t-max-icont-min-icon

காணும் பொங்கலையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஏராளமான பொது மக்கள் குவிந்தனர்.

சிதம்பரம்,

காணும் பொங்கல்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த 14-ந்தேதி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து 2-ம் நாளான நேற்று முன்தினம் மாட்டுப் பொங்கல் விழா கடைபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 3-ம் நாள் விழாவான காணும் பொங்கல் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நாளில் பொது மக்கள் தங்களது குடும்பத்துடன் சுற்றுலா தலங்கள் மற்றும் கோவில்களுக்கு சென்று மகிழ்ச்சியாக இருப்பது வழக்கம்.

அதன்படி காணும் பொங்கலையொட்டி சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, பரங்கிப்பேட்டை, புவனகிரி, சேத்தியாத்தோப்பு, கீரப்பாளையம், கிள்ளை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் நேற்று தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து அவர்கள் அங்கு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள் ஆயிரங்கால் மண்டபம் முன்பு கூட்டம் கூட்டமாக அமர்ந்து வீட்டில் இருந்து எடுத்து வந்த மதிய உணவை குடும்பத்துடன் சாப்பிட்டனர்.

சுற்றுலா பயணிகள்

இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் சிறுவர்கள் சிலம்பம், கபடி, கோ-கோ போன்ற விளையாட்டுகளை விளையாடினர். பெண்கள், சிறுமிகள் கும்மியடித்தும், கோலாட்டம் ஆடியும் மகிழ்ந்தனர். இதனை கோவிலுக்கு வந்திருந்த ஏராளமான பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். மேலும் காணும் பொங்கலையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் குவிந்தனர். இதில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க சிதம்பரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மனம்தவிழ்ந்தபுத்தூர்

இதேபோல் புதுப்பேட்டையை அடுத்த மனம்தவிழ்ந்தபுத்தூரில் உள்ள மங்காள் பிள்ளையார் கோவிலில் நேற்று காணும் பொங்கல் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி, பிள்ளையாருக்கு பால், பன்னீர், தயிர், இளநீர், சந்தனம், விபூதி போன்ற 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து, பிள்ளையாருக்கு பால்கோவாவால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. இந்த விழாவில் புதுப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குடும்பம், குடும்பமாக வந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர், கோவில் அருகே அமர்ந்து ஆடிப்பாடி பொழுதை போக்கி காணும் பொங்கலை கொண்டாடினர்.

மலையாண்டவர் கோவில்

சி.என்.பாளையத்தில் உள்ள மலையாண்டவர் கோவிலில் காணும் பொங்கல் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி, சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. விழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் ஊரணி பொங்கலிட்டு இறைவனை வழிபட்டனர்.

விழாவையொட்டி கோவிலுக்கு செல்லும் வழியில் ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. மலையாண்டவர், மங்காள் பிள்ளையார் ஆகிய கோவில்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. காணும்பொங்கலை முன்னிட்டு பல்வேறு கிராமப்புறங்களில் சைக்கிள் போட்டி, சிலம்பாட்டம், கயிறு இழுத்தல் போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

Next Story