கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் அமைக்கும் பிரச்சினை: 7 மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகளுடன் 6 அமைச்சர்கள் ஆலோசனை


கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் அமைக்கும் பிரச்சினை: 7 மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகளுடன் 6 அமைச்சர்கள் ஆலோசனை
x
தினத்தந்தி 17 Jan 2017 4:30 AM IST (Updated: 17 Jan 2017 1:33 AM IST)
t-max-icont-min-icon

கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்கும் பிரச்சினை குறித்து 7 மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகளுடன் 6 அமைச்சர்கள் கோவையில் ஆலோசனை நடத்தினார்கள்.

கெயில் எரிவாயு குழாய்

கெயில் நிறுவனம் கொச்சியில் இருந்து எரிவாயு குழாயை பதிக்க திட்டமிட்டுள்ளது. விவசாய நிலங் களில் இந்த குழாயை பதிக்க கூடாது என்றும், நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வற்புறுத்தி வருகிறார்கள். கெயில் நிறுவனம் விவசாய நிலத்தில் குழாய் பதித்தால் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த 6 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டில் விசாரணையில் உள்ளது.

விவசாய நிலத்தில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்க கூடாது என்று, தமிழக அரசும் சிறப்பு சட்டம் இயற்றியுள்ளது.

6 அமைச்சர்கள் ஆலோசனை

இந்த நிலையில் கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும், கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட வேண்டியது இருப்பதாலும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நேற்று கோவை ரெட்பீல்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வீட்டுவசதித்துறை அமைச்சர் உடு மலை ராதாகிருஷ்ணன், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் ஆகிய 6 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் வாழ்வாதார சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி, தலைவர் வழுக்குப்பாறை பாலு, செய லாளர் செந்தில்குமார் மற்றும் 7 மாவட்ட சங்க விவசாய சங்க தலைவர்கள் கலந்துகொண்டனர்.

விவசாயிகளின் நலனை காக்க முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதிப்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அமைச்சர்கள் வாக்குறுதி அளித்தனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலம் தொடர்பான கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதாகவும், பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு 100 சதவீதம் நிவாரணம் தொகை அளிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து விவசாயிகள் வாழ்வாதார சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

109 வழக்குகள்

கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதித்தால் விவசாயிகளுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும். விவசாயி களின் பட்டா நிலத்தில் கெயில் நிறுவனம் குழாய் பதிக்க அனுமதிக்க மாட்டோம் என்று அரசும் உறுதி அளித்துள்ளது. இது தொடர்பாக விவசாயிகள் சார்பில் தொடரப்பட்ட 109 வழக்குகள் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.

விவசாயிகளின் நிலத்தில் கெயில் நிறுவனம் குழாய் பதிக்க கூடாது என்று ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு, கெயில் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் தடையாணை பெற்று, அதன்படி இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று மாநில அரசை அந்த நிறுவனம் வற்புறுத்தி வருகிறது.

இரட்டை நிலை

இந்த பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு உயர்நிலை நிபுணர் குழுவை அமைத்து, 7 மாவட்டங் களில் ஏற்கனவே ஆய்வு செய்து தமிழக அரசு விவசாயிகளின் நலன் காக்க தேவையான சட்ட உத்தரவு களை பிறப்பித்து உள்ளது. ஆனால் கெயில் நிறுவனம் மத்திய அரசையும், மாநில அரசையும் ஏமாற்றி இரட்டை நிலை மேற்கொள்கிறது. மதுரையை சேர்ந்த முத்தரசன் என்பவர் தொடர்ந்த வழக்கில், இந்த நிறுவனம் தேவையில்லாமல் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை வருகிற 20-ந்தேதி சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இந்த பிரச்சினை குறித்து 18-ந்தேதி(நாளை) தமிழக முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்துடனும் ஆலோசனை நடத்த இருக்கிறோம். இந்த வழக்கில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளையும் சேர்க்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய இருக்கிறோம்.

தொடர்ந்து போராடுவோம்

விவசாயிகளின் நிலத்தில் எரிவாயு குழாயை பதிக்கக்கூடாது. இந்த திட்டத்தை ஒருபோதும் அனு மதிக்க மாட்டோம். ஏற்கனவே போராட்டம் நடத்தியுள்ளோம். தற்போது நீறுபூத்த நெருப்பாக இருந்த விவசாயிகள், மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்து போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். தமிழக அரசும் விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்தும் என்று உறுதிமொழி அளித்து உள்ளதால் முழு நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ஏ.கே.செல்வராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், கோவை மாவட்ட கலெக்டர் ஹரிகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story