அரியாங்குப்பம் அருகே முன்விரோத தகராறில் 5 பேர் படுகாயம்
அரியாங்குப்பம் அருகே முன்விரோத தகராறில் பெண் உள்பட 5 பேர் தாக்கப்பட்டனர்.
புதுவை மாநிலம் அரியாங்குப்பம் அருகே நோணாங்குப்பம் காலனி உள்ளது. இங்குள்ள தென்னந்தோப்பில் அப்பகுதியை சேர்ந்த சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணம் வைத்து கோலி விளையாடியதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து, கோலி விளையாடியவர்களை எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கோலி விளையாடியவர்கள், தங்களை காட்டிக்கொடுத்தவர்கள் யார் என்று தெரியாமல், அவர்களை தரக்குறைவாக திட்டி வந்தனர். இதனால் தென்னந்தோப்பு பகுதியை சேர்ந்தவர்களுக்கும், கோலி விளையாடிய வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.
தாக்குதல்இந்நிலையில் காணும் பொங்கல் விழாவான நேற்று தென்னந்தோப்பில் யாரும் கோலி விளையாட முடியாதபடி அப்பகுதியை சேர்ந்த வீரபத்திரன் என்பவர் தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சினார். எனவே தோப்பு பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் விளையாடி முடியாத ஆத்திரத்தில், அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் நேற்று இரவு வீரபத்திரனை திட்டி, தாக்கினர். இதை தடுக்க முயன்ற அய்யனார் மற்றும் சிலரையும் அவர்கள் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.
இந்த மோதலில் ரத்தினாம்பாள் (வயது 55), வீரபத்திரன், அய்யனார் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக அரியாங்குப்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புகார் கொடுக்க திரண்டனர்இந்த தாக்குதல் தொடர்பாக அரியாங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் அய்யனார், வீரபத்திரன் ஆகியோரின் உறவினர்கள் புகார் கொடுக்க அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் நேற்று இரவு திரண்டதால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.