இறந்து கரை ஒதுங்கிய ஆலிவ்ரெட்லி ஆமைகள்


இறந்து கரை ஒதுங்கிய ஆலிவ்ரெட்லி ஆமைகள்
x
தினத்தந்தி 17 Jan 2017 4:30 AM IST (Updated: 17 Jan 2017 2:13 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே ஆலிவ்ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. இந்த ஆமைகளை வனத்துறையினர் குழிதோண்டி புதைத்தனர்.

திருவெண்காடு,

ஆலிவ்ரெட்லி ஆமைகள்

200 ஆண்டுகள் வரை வாழக்கூடிய அரிய வகை ஆமைகளான ஆலிவ்ரெட்லி வகையை சேர்ந்த ஆமைகள் அந்தமான், இலங்கை மற்றும் ஒடிசா கடல் பகுதியில் காணப்படுகின்றன. இந்த வகை ஆமைகள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை முட்டையிடுவதற்கு நாகை மாவட்ட கடற்கரைக்கு வருகின்றன. நள்ளிரவு நேரங்களில் கரைக்கு வரும் ஆமைகள் கடற்கரையில் குழிதோண்டி 200 முட்டைகள் வரை இட்டுவிட்டு, பின்னர் அந்த குழியை மூடிவிட்டு மீண்டும் கடலுக்குள் செல்கின்றன. ஆனால், இந்த முட்டைகளை நரி, நாய், காட்டுப்பூனை, கழுகுகள் போன்றவை வேட்டையாடி விடுகின்றன. மேலும், கடலில் பல்லாயிரம் நாட்டிக்கல் மைல் தூரம் நீந்தி வரும் இந்த ஆமைகள், வழியில் மீனவர்களின் வலையில் சிக்கியும், கப்பல்களில் அடிபட்டும் 30 சதவீதம் ஆமைகள் இறந்துவிடுகின்றன. இவற்றையும் மீறி முட்டையிட்டு செல்லும் இந்த ஆமைகளின் இனத்தை காப்பாற்ற கடந்த 2003-ம் ஆண்டு முட்டைகளை சேகரித்து இனப் பெருக்கம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி இந்த திட்டத்தை வனத்துறையினர் செயல் படுத்தி வருகின்றனர். நாகை மாவட்டம், சீர்காழி அருகே கீழமூவர்க்கரை, திருமுல்லைவாசல், தொடுவாய், கூழையாறு, மேலமூவர்க்கரை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட ஆலிவ்ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி கிடந்தன.

எம்.எல்.ஏ. பார்வையிட்டார்

இறந்து கரை ஒதுங்கிய ஆமைகளை பார்த்த மீனவர்கள் இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். மேலும் பாரதி எம்.எல்.ஏ. மேற்கண்ட பகுதிக்கு சென்று இறந்த ஆமைகளை பார்வையிட்டார். அப்போது அங்கு இருந்த வனத்துறை அதிகாரிகளிடம், இறந்து கிடந்த ஆமைகளால் அந்த பகுதியில் நோய் பரவாமல் இருக்கவும், ஆமைகள் இறப்பதற்கான காரணம் குறித்து விசாரணை செய்யவும் கேட்டு கொண்டார். பின்னர் வனத்துறையினர் இறந்த ஆமைகளை குழிதோண்டி புதைத்தனர்.

Next Story