நீடாமங்கலம் அருகே விவசாயி கொலை: சகோதரர்கள் 4 பேர் கைது


நீடாமங்கலம் அருகே விவசாயி கொலை: சகோதரர்கள் 4 பேர் கைது
x
தினத்தந்தி 17 Jan 2017 3:45 AM IST (Updated: 17 Jan 2017 2:13 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் அருகே விவசாயியை கொலை செய்த சகோதரர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நீடாமங்கலம்,

விவசாயி கொலை

நீடாமங்கலம் அருகே ஒட்டக்குடி கிராமம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது27). விவசாயி. மன்னார்குடி அருகே உள்ள தோட்டச்சேரியை சேர்ந்தவர் சேகர்(45). இவருடைய மனைவி கலைவாணி. சேகர் ஒட்டக்குடியில் தனது மாமனார் வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் தமிழ்ச்செல்வன் குடும்பத்துக்கும், சேகர் குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் சேகர் வீட்டிற்கு தோட்டச்சேரியை சேர்ந்த அவரது உறவினர்கள் 4 பேர் வந்தனர். அவர்களை கிராமத்தினர் இங்கு நீங்கள் வரக்கூடாது. நீங்கள் வந்தால் தகராறு ஏற்படுகிறது என ஏற்கனவே அறிவுறுத்தியும், எப்படி வந்தீர்கள் எனக்கேட்டனர். இதனால் தமிழ்ச்செல்வன் தரப்பினருக்கும், சேகர் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த சேகர் மற்றும் அவரது உறவினர் தோட்டச்சேரி கிராமத்தை சேர்ந்த சிலர் தாங்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் தமிழ்ச்செல்வனை சரமாரியாக தாக்கினர்.

இதில் படுகாயமடைந்த தமிழ்ச்செல்வனை நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் தமிழ்ச் செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

4 பேர் கைது

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் தோட்டச்சேரியை சேர்ந்த வெள்ளிநாதன் மகன்கள் ரஞ்சித் (27), வினோத்(24) பழையகாக்கையாடி பகுதியை சேர்ந்த ராதா மகன்கள் நீலமேகம் (23), ஹரிஹரசுதன்(19) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சேகர், அவரது மனைவி கலைவாணி (37), தோட்டச்சேரியை சேர்ந்த வடிவேல் மகன் கோபி(32) ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story