ரூ.175 கோடி செலவில் மேம்பாலம் அமைக்க திட்டம் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு


ரூ.175 கோடி செலவில் மேம்பாலம் அமைக்க திட்டம் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு
x
தினத்தந்தி 17 Jan 2017 3:45 AM IST (Updated: 17 Jan 2017 2:18 AM IST)
t-max-icont-min-icon

களியக்காவிளையில் ரூ.175 கோடி செலவில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

அருமனை,

பொங்கல் விழா பொதுக்கூட்டம்


அருமனையில் 13–வது பொங்கல் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:–

பொங்கல் விழாவை தமிழர்கள் தேசபக்த விழாவாகவே கொண்டாடி வருகிறோம். ஜல்லிக்கட்டு என்பது கலாசார விளையாட்டு. நமது நாட்டின் கலாசார விளையாட்டு அழிந்து விடக்கூடாது. ஜல்லிக்கட்டு நடத்த தொடர்ந்து முயற்சி மேற்கொள்வோம். மீண்டும் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

மேம்பாலம் பணிகள்


மார்த்தாண்டம் மேம்பால பணிகள் 2018–ம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோட்டாறு – செட்டிக்குளம் டெரிக் இடையே 3.5 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் அமைக்கப்படும். பார்வதிபுரம் மேம்பாலம் பணி விரைவில் தொடங்கப்படும். புதிதாக களியக்காவிளையில் ரூ.175 கோடி செலவில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இனயம் வர்த்தக துறைமுக பணிக்கான முதல்கட்ட ஆய்வு பணிகள் முடிந்துள்ளது. முழுமையான ஆய்வு பணிகள் உடனே நடத்தப்படும். இனயம் வர்த்தக துறைமுகத்துடன் மீனவர்களின் தொழில் பாதிக்கப்படாமல் இருக்க மீன்பிடி துறைமுகத்தையும் மத்திய அரசே அமைக்கும். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் துறைமுகம் செயல்படும். இந்த துறைமுகத்தின் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைகள் கிடைக்கும். குமரி மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டிற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டு மைதானம்


நீர்வழி போக்குவரத்து நடைபெற புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி, ராமேஸ்வரம்– பாண்டிச்சேரி வழி சென்னை தடங்களில் படகு போக்குவரத்து அமைக்க ரூ.200 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி அருகே 5 ஏக்கர் நிலத்தில் ரூ.15 கோடியில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் பெயரில் சர்வதேச தரத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். விழாவில், பா.ஜனதா கட்டி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story