லாரி உரிமையாளர்கள் பொது இடங்களில் கழிவுநீரை வெளியேற்றினால் ரூ.10 ஆயிரம் அபராதம்
திருவள்ளூர் நகராட்சி ஆணையர் செந்தில்குமரன் விடுத்து உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
திருவள்ளூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் திருவள்ளூர், சேலை, காக்களூர் போன்ற பகுதிகளில் கழிவுநீரை பொது இடங்களில் வெளியேற்றி விடுகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு அப்பகுதி மக்களுக்கும் உடல் உபாதைகள் ஏற்படுகிறது.
எனவே திருவள்ளூர் நகராட்சி பகுதியில் கழிவு நீர் லாரிகள் வைத்திருப்பவர்கள் கட்டாயமாக ரூ.4 ஆயிரத்து 500 செலுத்தி நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளவேண்டும். நகராட்சி பகுதிகளில் எடுக்கப்படும் கழிவு நீரை பொதுஇடங்களில் வெளியேற்றாமல் அவற்றை திருவள்ளூர் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள பத்மாவதிநகர் கழிவு நீரேற்றும் நிலையத்தில் மட்டுமே விடவேண்டும்.
அவ்வாறு செல்லும் லாரிகள் ஒன்றுக்கு ரூ.200 வீதம் நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளவேண்டும். நகராட்சியில் குறிப்பிடப்பட்ட இடத்தை தவிர வேறு பொது இடங்களில் கழிவுநீரை வெளியேற்றினால் அதனை மீறும் கழிவுநீர் லாரி உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதுடன் அவர்களுடைய உரிமம் ரத்து செய்யப்பட்டு காவல்துறை மூலம் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Next Story